ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு அனுராதபுரம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2009 இல் முள்ளிவாய்க்காலில் சிக்குண்ட மக்களின் அவல நிலைமை தொடர்பில் இந்திய ஊடகமொன்றில் வெளிப்படுத்தியதை தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சேர்ந்து செயற்பட்டதாக செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சீலன் என்பவர் மீது அப்போதைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தது.
செல்வம் அடைக்கலநாதன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும், சீலன் என்பவர் 8 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 16ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, செல்வம் அடைக்கலநாதன் முன்னிலையாகியிருக்கவில்லை. அவர் அயலக தமிழர் மாநாட்டுக்காக இந்தியா சென்றிருந்தார்.
இந்த நிலையில், செல்வம் அடைக்கலநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை அனுராதபுரம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து பிணைக்கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக செல்வம் அடைக்கலாநாதன் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.