விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்லர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் வயது குழந்தை உயிரிழந்தது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த குழந்தையின் தாய் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
குறித்த குழந்தையின் இறுதிக் கிரியைகள் கடந்த 1ம் திகதி இடம்பெற்ற நிலையில், இன்றைய தினம் 34 வயதுடைய குறித்த குடும்பப் பெண்ணின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது.
இந்த நிலையில், விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, பெரும் திரளான மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
மது போதையில் வாகனம் செலுத்துதல், அதிக வேகம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தி கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், பாதசாரிக் கடவைகளில் வீதி மின் விளக்குகளை அமைக்குமாறும் மக்களால் வலியுறுத்தப்பட்டது.
நகர திட்டமிடலை மீள் பரிசீலனை செய்து, பரந்தன் முதல் முறிகண்டி வரை வீதி விளக்குகளை அமைக்குமாறும், இரட்டைப் பாதைகளை அமைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துமாறும் மக்கள் வலியுறுத்தினர்.
மேலும், பரத்தன் சந்தி, டிப்போ சந்தி, காக்காக்கடை சந்தி, கரடிபோக்கு சந்தி உள்ளிட்ட பகுதிகளில் வீதி மின் விளக்கு சமிக்கைகளை அமைக்குமாறும் மக்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், போக்குவரத்து பொலிசாரை வீதிக்கடமைகளில் அமர்த்துமாறும், தண்டனைக்குரிய குற்றங்களுக்கு அதி உயரிய தண்டனைகளை வழங்குமாறும் மக்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது போன்ற சம்பவங்கள் மூலம் அப்பாவி மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதையும், அழகான குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாவதையும் தடுக்க பொலிசாரும் சம்மத்தப்பட்ட தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி மேற்படி கவனயீர்ப்பில் ஈடுபட்டதுடன், ஜனாதிபதி உள்ளிட்ட பலருக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.
பொலிஸ்மா அதிபருக்கான மகஜர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்த தந்ரீயிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 1000 போதை பரிசோதனை குழாய்களை தான் கொழும்பிலிருந்து எடுத்துள்ளதாகவும் தெரிவித்ததுடன், வேக கட்டுப்பாடு, போதையில் வாகனம் செலுத்தல் உள்ளிட்ட விடயங்களை கட்டுப்படுத்த பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.