ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதேவேளையில் இந்திய அணியின் இந்த திடீர் சரிவு மற்ற அணிகளுக்கான வாய்ப்பின் கதவுகளை திறந்துள்ளது.
தற்போதைய நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா 62.82 வெற்றி சராசரியுடன் முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலிய அணி 62.50 வெற்றி சராசரியுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளே மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் காணப்பட்டது. எனினும் நியூஸிலாந்துக்கு எதிரான இரு தோல்விகளால் இந்திய அணியின் வாய்ப்பு கடினமாக மாறி உள்ளது.
இந்தியா, அவுஸ்திரேலியாவை தவிர்த்து இலங்கை, தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
இதுபற்றிய ஓரு பார்வை….
1.இந்தியா: இந்திய அணி தற்போது 62.82 வெற்றி சராசரியுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணிக்கு இன்னும் 6 டெஸ்ட் போட்டிகள் மீதம் உள்ளன. இதில் நியூஸிலாந்துக்கு எதிராக வரும் 1ஆம் திகதி மும்பையில் தொடங்கும் டெஸ்ட் மற்றும் அடுத்த மாத இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் அடங்கும்.
இந்த 6 போட்டிகளின் வாயிலாக இந்திய அணி அதிகபட்சமாக 74.56 வெற்றி சராசரியை அடைய வாய்ப்பு உள்ளது. மும்பையில் நடைபெற உள்ள நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், அடுத்து அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் குறைந்தது 3 வெற்றிகளை பதிவு செய்ய வேண்டும். மாறாக நியூஸிலாந்து அணியிடம் மீண்டும் தோல்வி அடைந்தால் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இது நிகழ்ந்தால் மட்டுமே தொடர்ச்சியாக 3வது முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கால்பதிக்க முடியும்.
2.அவுஸ்திரேலியா: அவுஸ்திரேலிய அணியின் வெற்றி சராசரி 62.50 ஆக இருக்கிறது. அந்த அணி சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது. இவற்றின் வாயிலாக அதிகபட்சமாக அஸ்திரேலிய அணி 76.32 வெற்றி சராசரி பெற வாய்ப்பு உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலிய அணி, தொடர்ச்சியாக 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள 7 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 4ல் வெற்றி பெற வேண்டும்.
இந்தியாவை விட அவுஸ்திரேலியாவுக்கு உள்ள ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால், அடுத்த ஆண்டு இலங்கையில் அவர்களுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒருவேளை ஆஸ்திரேலிய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தாலும், இலங்கை சுற்றுப்பயணத்தில் சாதித்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். இது ஒருபுறம் இருந்தாலும் கடந்த 10 வருடங்களாக சொந்த மண்ணில் இந்திய அணியிடம் தோல்வி கண்டும் வரும் அவுஸ்திரேலிய அணி இம்முறை தீவிரமாக தயாராகி வருகிறது.
3.இலங்கை: இலங்கை அணி 55.56 வெற்றி சராசரியுடன் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. தொடர்ந்து தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் வாயிலாக அதிகபட்சமாக இலங்கை அணி 69.23 வெற்றி சராசரியை அடைய வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்து மண்ணில் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றது இலங்கை அணிக்கு திருப்பு முனையை கொடுத்தது. தொடர்ந்து நியூஸிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையா கைப்பற்றியது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. எஞ்சியுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி 3இல் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெறலாம்.
எனினும் அது எளிதல்ல. தென்னாபிரிக்க மண்ணில் அடுத்த மாதம் நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இலங்கை ஒன்றில் வெற்றி பெற்றால் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம். இது நிகழ்ந்தால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கையில் நடைபெற உள்ள இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரே, இறுதிப் போட்டிக்கு எந்த அணி முன்னேறும் என்பதை முடிவு செய்யக்கூடியதாக இருக்கும்.
4.நியூஸிலாந்து: நியூஸிலாந்து அணியின் வெற்றி சராசரி 50 ஆக உள்ளது. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக மும்பையில் விளையாட உள்ளது. இதைத் தொடர்ந்து தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளது. இதன் வாயிலாக நியூஸிலாந்து அணி அதிகபட்சமாக 64.29 வெற்றி சராசரியை பெற வாய்ப்பு உள்ளது.
முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ள நியூஸிலாந்து அணி, 2வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் அதிக அளவில் உழைக்க வேண்டும். அந்த அணி எஞ்சியுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டியில் கால் பதிக்க முடியும். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 எனவும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 எனவும் கைப்பற்றினால் மட்டுமே நியூஸிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.
5. தென்னாபிரிக்கா: தென்னாபிரிக்க அணி 47.62 சராசரி புள்ளியுடன் உள்ளது. அந்த அணி வங்கதேச அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும், சொந்த மண்ணில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா இரு டெஸ்ட் போட்டிகளையும் விளையாட உள்ளது. இதன் வாயிலாக தென்னாபிரிக்க அணி அதிகபட்சமாக 69.44 வெற்றி சராசரி பெற வாய்ப்பு உள்ளது.
வங்கதேசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தென்னாபிரிக்க அணி, அதே செயல் திறனை 2வது போட்டியிலும் பிரதிபலிக்கச் செய்தால் கூடுதல் நம்பிக்கையை பெறும். தொடர்ந்து சொந்த மண்ணில் அடுத்ததாக நடைபெற உள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் 3இல் வெற்றி பெற்றால் தென்னாபிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெறலாம்.
6. இங்கிலாந்து: இங்கிலாந்து அணி 40.79 வெற்றி சராசரியுடன் உள்ளது. அந்த அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர்தான் இங்கிலாந்து அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் கடைசி தொடராகும். இந்த தொடரின் வாயிலாக இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 48.86 வெற்றி சராசரியையே பெற முடியும். இது இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு போதுமானதாக இருக்காது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த போதே, இங்கிலாந்து அணியின் இறுதிப் போட்டி கனவு கலைந்தது.
7. பாகிஸ்தான்: பாகிஸ்தான் அணி 33.33 வெற்றி சராசரியுடன் உள்ளது. அந்த அணி தென்னாபிரிக்காவில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதைத் தொடர்ந்து சொந்த மண்ணில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை சந்திக்கிறது. இதன் வாயிலாக அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி 52.38 வெற்றி சராசரியை பெறக்கூடும். எனினும் இது இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு போதாது. ஏனெனில் ஏற்கெனவே 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
30.56 வெற்றி சராசரியுடன் வங்கதேச அணியும், 18.52 வெற்றி சராசரியுடன் உள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வரிசையிலேயே இல்லை. வங்கதேச அணியானது தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும், மேற்கு இந்தியத் தீவுகளில் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.