விசாரணைக்கு அழைக்கப்பட்ட எவருக்கும் அழைப்பாணை வழங்கப்படும் நேரத்தில் அவருக்கு எதிரான புகாரின் உள்ளடக்கத்தை தெரிவிக்குமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கை ஒன்றை உருவாக்குவதாக பொலிஸ்மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்தார்.
கடந்த ஆண்டு வெளியான ஃபேஸ்புக் பதிவு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் டொக்டர் மகிந்த ரலபனாவவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நீதியரசர்களான காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் நேற்று இடம்பெற்ற இந்த விசாரணைக்காக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இந்த மனுவில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆய்வாளர், உப ஆய்வாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உட்பட நான்கு தரப்பினர் பிரதிவாதிகளாகப் பெயரிட்டுள்ளனர்.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, இந்த வரைவு சுற்றறிக்கை எதிர்காலத்தில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜரானார். இந்த மனு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.




