26.3 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இந்தியா

இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் மீட்பு!

சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட ‘எம்.வி லீலா நார்போக்’ சரக்கு கப்பலை, ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கி மீட்டனர்.

அரபிக் கடல் மற்றும் செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவதும், டிரோன் மூலம் தாக்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. கடந்த மாதம் 23ஆம் திகதி 20 இந்திய மாலுமிகளுடன் சென்ற எம்.வி. கெம் ப்ளூட்டோ என்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கப்பலை இந்திய கடற்படையினர் மீட்டனர். இதேபோல் 25 இந்திய மாலுமிகளுடன் சென்ற எம்.வி.சாய்பாபா கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், லிபேரியா நாட்டின் ‘எம்.வி. லீலா நார்ஃபோக்’ என்ற சரக்கு கப்பல், பிரேசில் நாட்டில் இருந்து பஹ்ரைனுக்கு சென்று கொண்டிருந்தது. அரபிக்கடல் பகுதியில் சோமாலியா கடற்கரை அருகே 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது, விரைவுப் படகில் ஆயுதங்களுடன் வந்த 6 கொள்ளையர்கள் கப்பலுக்குள் ஏறினர். அந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 15 பேர் உட்பட 21 மாலுமிகள் இருந்தனர்.

கப்பல் கடத்தப்பட்ட தகவல் இங்கிலாந்து நாட்டின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. சரக்கு கப்பல் போக்குவரத்து முழுவதையும் இங்கிலாந்து ராணுவ அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்த கடத்தல் குறித்த தகவல், இந்திய கடற்படைக்கு நேற்று முன்தினம் மாலை கிடைத்தது. இதையடுத்து கடற்படையின் கண்காணிப்பு விமானம் சோமாலிய கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்று, கடத்தப்பட்ட கப்பலுக்கு மேலே பறந்தபடி அந்த கப்பலுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தியது. அந்த கப்பலில் இந்திய மாலுமிகள் கவச அறையில் இருந்தபடி கப்பலை இயக்குவது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அந்த சரக்கு கப்பலை மீட்க, ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் அனுப்பப்பட்டது. கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பின்தொடர்ந்தது ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல். சரக்கு கப்பலைவிட்டு கொள்ளையர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என, போர்க்கப்பலில் இருந்து சென்ற ஹெலிகாப்டர் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின் போர்க்கப்பலில் இருந்து கடற்படையின் ‘மர்காஸ்’ கமாண்டோக்கள் ஹெலிகாப்டர் மூலம் சரக்கு கப்பலில் குதித்து, கொள்ளையர்களை தேடினர்.

சரக்கு கப்பலின் மேல் தளத்தில் கொள்ளையர்கள் யாரும் இல்லை. இதையடுத்து, சரக்கு கப்பலின் கவச அறையில் இருந்த இந்திய மாலுமிகளை கடற்படை கமாண்டோக்கள் பாதுகாப்பாக மீட்டனர். கப்பலின் மற்ற பகுதியில் கடற்கொள்ளையர்களை தேடும் பணியில் கடற்படை கமாண்டோக்கள் ஈடுபட்டனர். ஆனால், எங்கும் கடற்கொள்ளையர்கள் இல்லை. இந்திய கடற்படையினர் விடுத்தஎச்சரிக்கையை அடுத்து, கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலைவிட்டு தப்பிவிட்டதாக தெரிகிறது. சரக்கு கப்பலில் கடற்கொள்ளையர்கள் யாரும் இல்லை என்பதை, கடற்படை கமாண்டோக்கள் உறுதி செய்துள்ளனர். சரக்கு கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. சரக்கு கப்பல் தனது பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான உதவியை, ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் அளித்து வருகிறது.

அரபிக் கடல் பகுதியில் சோமாலியா வழியாக செல்லும் கப்பல்களுக்கு பலவிதமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி தீவிரவாதிகள் சரக்கு கப்பல்களை டிரோன் மூலம் தாக்கும் செயலில் இறங்கியுள்ளனர். இதனால் இப்பகுதியில் வணிக கப்பல் போக்குவரத்து மிகவும் கவலையளிக்க கூடியதாக மாறியுள்ளது.

இதனால், அரபிக் கடல் பகுதியில் 4 போர் கப்பல்கள் ரோந்து செல்ல இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளது. இந்திய கடல் பகுதி முழுவதும் தேவையான பாதுகாப்பை வழங்குவதில் இந்தியா முக்கிய பங்காற்றும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

Leave a Comment