பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முதன்முறையாக முகத்தை அடையாளப்படுத்தும் தொழில்நுட்பத்தை நாட்டின் நீதி அமைப்பில் பயன்படுத்துவதற்கு சட்டமா அதிபர் ஏற்பாடு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நிட்டம்புவவில் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டனர்.
ஆட்சியாளர்கள் மீதான மக்களின் கோபம் அதிகரித்ததையடுத்து ஏற்பட்ட பொதுமக்கள் எழுச்சியின் போது, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர் பொதுஜன பெரமுன குண்டர்கள், காலி முகத்திடலில் பொதுமக்கள் போராட்டக்காரர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தினர்.
இதனால் நாடு முழுவதும் கொந்தளித்து, பொதுஜன பெரமுனவினரை நையப்புடைத்தனர்.
அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்சவின் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்ட, பொலன்னறுவை திரும்பிக் கொண்டிருந்த அமரகீர்த்தி அத்துக்கோரள பயணித்த வாகனம். நிட்டம்புவ நகரில் கோபமடைந்த பொதுமக்களிடம் சிக்கியதில், இந்த படுகொலை நிகழ்ந்தது.
இந்த கொலைகள் தொடர்பாக மூவரடங்கிய உயர் நீதிமன்ற ட்ரயல் அட்-பார் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளை அடையாளம் காண முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
வெள்ளிக்கிழமை கம்பஹா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பிரசன்ன பண்டார, வழக்கு விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் என நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன் மூலம், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும், அந்தக் காட்சிகளில் காணப்பட்டவர்களின் முகங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒத்துப் போகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையில் குற்றத்தில் ஈடுபட்டார்களா என்பதை அடையாளம் காண முடியும் என்றும் அவர் கூறினார். குற்றத்திற்கு காரணமானவர்களை சாதகமாக கண்டறிந்து அவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட 41 பேர் மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் இறந்துவிட்டனர், மேலும் இருவர் ஆஜராகாத நிலையில் விசாரிக்கப்படுகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பது தெரிந்ததே, மற்றையவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட இருவர் சார்பிலும் சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஹான் மாபா பண்டார (தலைவர்), ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ருவன் பத்திரன ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று குற்றப்பத்திரிகைகள் வாசிக்கப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்தனர்.