வர்த்தகர் சங்கங்கள், பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடிய பின்னர் வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்புக்கு அடுத்த வாரத்தில் ஒருநாள் திகதி நிர்ணயிக்கவுள்ளதாக தமிழ் தேசிய கட்சிகள் அறிவித்துள்ளன.
இன்று (6) யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், நல்லூரிலுள்ள க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இன்றைய சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க.வி.விக்னேஸ்வரன், புளொட் தரப்பில் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் நிரோஸ், தமிழ் தேசிய கட்சி சார்பில் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் கலையமுதன், ஜனநாயக போராளிகள் கட்சியின் வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்றைய கூட்டத்துக்கு முன்னதாக, கிழக்கு மாகாணத்தில் கதவடைப்பு மேற்கொள்வது தொடர்பில் முஸ்லிம் தரப்புடன் பேச்சு நடத்தும் பொறுப்பு எம்.ஏ.சுமந்திரனிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அவர் இன்று பேச்சு நடத்தி, கதவடைப்பு போராட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் கொள்கைரீதியாக ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்றைய கலந்துரையாடலில், அனைத்து தரப்புடனும் பேசி கதவடைப்பு போராட்டத்துக்கு திகதி நிர்ணயிப்பதென முடிவானது.
அடுத்த வாரத்தில் ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தகர் சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது. ஞாயிறு அல்லது திங்கள்கிழமை யாழ் மத்திய கல்லூரி, தந்தை செல்வா அரங்கில் பொதுஅமைப்புக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
இதை தொடர்ந்து கதவடைப்புக்கான திகதி நிர்ணயிக்கப்படும்.




