சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஞானப்பிரகாசம் கிஷோர் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை ஆராய்ந்த வடக்கு மாகாண மேல்நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு இடைக்காலத் தடைக்கட்டளை வழங்க இன்றைய தினம் (06.07.2026) திங்கட்கிழமை மறுத்துள்ளது.
முன்னதாக, கடந்த 19.06.2026 ஆம் நாளிட்டு 24.06.2026 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாகத் ஆளுநர் தன்னை பதவி நீக்கம் செய்திருந்தமைக்கு எதிராக உப தவிசாளர் கிஷோர், கடந்த சனிக்கிழமை (04.07.2026) அன்று அவர் வடக்கு மாகாண மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். தனிநபர் விசாரணை அதிகாரி க.அரியநாயகத்தின் அறிக்கை, சாவகச்சேரி நகராட்சி மன்றம் முழுவதையும் கலைக்குமாறு பரிந்துரைத்திருந்த போதிலும், அதனை மீறித் தன்னை மட்டும் ஆளுநர் பதவி நீக்கியது ஏன் என்ற கேள்வியையும், சபை நடுவே வணிகர்களின் நலனுக்காகத் தான் பேசிய கருத்துரிமை மீறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி, சட்டத்தரணி கலாநிதி கு.குருபரனினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்றைய தினம் (06.07.2026) இந்த மனு இடைக்காலத் தடைக்கட்டளைக்காக நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முறையீட்டாளர் சார்பில் மிக நீண்ட நேரம் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன. கிஷோருக்கு எதிராக எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்பதும், 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் போர்க்காலத்தில் கட்டப்பட்டு இணக்கச் சான்றிதழ் பெறப்படாத கட்டடங்களைக் கொண்ட பெரும்பாலான வர்த்தகர்கள் சாவகச்சேரியில் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தினாலேயே, இணக்கச் சான்றிதழைக் கட்டாயப்படுத்தக் கூடாது என நகராட்சி மன்றக் கூட்டத்தில் அவர் உரையாற்றியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. நகராட்சி மன்றக் கட்டளைச் சட்டத்திற்கு உட்பட்டு ஆற்றப்பட்ட இந்த உரையின் காரணமாக அவரை நீக்கியது சனநாயகப் படுகொலை எனவும், நகராட்சி மன்றங்களின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாகும் எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மனுதாரர் தரப்பின் நீண்ட வாதங்களைச் செவிமடுத்த வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு நீதிபதி திரு. க.சதீஸ்வரன், எதிர்மனுதாரர்களான வட மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர், தனிநபர் விசாரணை அதிகாரி உள்ளிட்டோருக்கு அறிவித்தல் அனுப்ப இணங்கிய போதிலும், இடைக்காலத் தடைக்கட்டளையை வழங்க மறுத்துத் தீர்ப்பளித்தார்.
மற்றைய தரப்பினரின் வாதங்களையும் கேட்டே முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, முகத்தோற்றமளவில் ஆளுநர் நடைமுறைமுறைகளைப் பின்பற்றியே முடிவுகளுக்கு வந்துள்ளார் எனவும், இக்கட்டத்தில் இடைக்காலத் தடைகளை வழங்குவது பிழையான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதாக அமையும் எனவும் தனது கட்டளையில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்துக் கருத்துத் தெரிவித்த முறையீட்டாளரின் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன், நீதிமன்றத்தின் இக்கட்டளையைத் தாம் மதிப்பதாகவும், எனினும் இடைக்காலக் கட்டளைகளை மறுத்தமைக்கான நியாயமான காரணங்கள் இன்றைய கட்டளையில் இல்லை என்பதால் இதற்கு எதிராகப் பொருத்தமான மாற்று வழிகள் தாம் நாட உள்ளதாகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.




