இந்தியாவில் இன்னும் தன்பால் திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு எதிர்பார்க்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனாலும் ஆங்காங்கே தன்பாலின ஜோடிகள் சிலர், பெற்றோர், சமூகத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்கின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப்பில் மிகவும் அபூர்வமாக பெற்றோர் ஒப்புதலோடு இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்டனர். பஞ்சாப் மாநிலம் பதிந்தா நகரில் வசிப்பவர் மணிஷா (21). இவரின் தோழி டிம்பிள் (27). தன்பாலின ஜோடியான இவர்கள், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். தங்களது முடிவை பெற்றோரிடம் தெரிவித்தபோது ஆரம்பத்தில் எதிர்த்தாலும் பின்னர் அவர்களும் சம்மதித்து விட்டனர். உள்ளூர் சீக்கிய குருத்வாராவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமணத்தில், டிம்பிள் ஆண் போன்று உடையணிந்து சீக்கியர்களின் அடையாளமான டர்பன் வைத்து மணமகனாக தோன்றினார். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என 70 பேர் இத்திருமணத்தில் கலந்துகொண்டனர். அனைத்து திருமண சடங்குகளும் நடந்தன. அவர்களுக்கு சீக்கிய மதகுரு ஹர்தேவ் திருமணம் செய்து வைத்தார்.
இப்போது, இத்திருமணம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சீக்கிய மத குருக்களின் தலைவரான ரக்பீர் சிங் அளித்த பேட்டியில், “தன்பால் திருமணம் இயற்கைக்கு மாறானது. சீக்கிய கோட்பாடுகளுக்கு எதிரானது. அந்தத் தம்பதிக்கு திருமணம் செய்து வைத்த மதகுருமார்களை சஸ்பெண்ட் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது“ என்று தெரிவித்துள்ளார்.
தன்பாலின ஜோடிக்கு திருமணம் செய்துவைத்த ஹர்தேவ் சிங் உட்பட 4 பேர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து, தன்பாலின ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த ஹர்தேவ் கூறுகையில், “மணமகன், மணமகள் இருவரும் பெண்கள் என்பதை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. மணமகன் கோலத்தில் இருந்தவர் டர்பன் அணிந்திருந்தார்“ என்றார்.
இது குறித்து டிம்பிளிடம் கேட்கப்பட்டபோது, “திருமணத்திற்கு முன்பு எங்கள் இருவரது அடையாள அட்டைகளை குருத்வாராவில் கொடுத்திருந்தோம். எனவே இதில் குழப்பத்திற்கு வாய்ப்பே இல்லை“ என்று தெரிவித்துள்ளார்.
டிம்பிள், மான்சா மாவட்டத்தை சேர்ந்த உயர்ந்த சாதி சீக்கிய பெண். மணிஷா, பதிந்தா மாவட்டத்தை சேர்ந்த இந்து பட்டியலின பெண். இவர்கள் இருவரும் சண்டிகர் அருகில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் சேர்ந்து வேலை செய்தபோது காதல் ஏற்பட்டது. டிம்பிள் எப்போதும் பேன்ட் மற்றும் சட்டை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதோடு தனக்கு ஆண்கள் மீது விருப்பம் இல்லை என்று தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும் தங்கள் மகளின் உணர்வுகளை புரிந்துகொண்டனர்.
இது குறித்து டிம்பிள் கூறுகையில், “வீட்டிற்கு ஒரே மகளாக இருந்த நான் ஆணாக மாற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள டாக்டரிடம் ஆலோசனை நடத்தினேன். ஆனால் ஆபரேஷன் எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்று தெரியாது என்பதால் என் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. 2017ஆம் ஆண்டு சண்டிகர் அருகில் உள்ள சிராபூர் என்ற இடத்திற்கு சென்று வேலை செய்தபோது, தன்பாலின நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. அப்போதுதான் மணிஷா எனக்கு அறிமுகமானார்“ என்று கூறியுள்ளார்.
மணிஷா கூறுகையில், “நான் ஐந்து ஆண்டுகளாக வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த நட்பு முறிந்துவிட்டது. அதன் பிறகு வேறு ஒரு பெண்ணுடன் சில மாதங்கள் டேட்டிங்கில் இருந்தேன். அதுவும் சரிவரவில்லை. டிம்பிளுடன் வேலை செய்தபோது அவருடன் பழகிய 4 நாள்களில் அவரை காதலிப்பதாக போனில் தெரிவித்தேன். அவரும் ஏற்றுக்கொண்டார்“ என்று தெரிவித்துள்ளார்.




