பிரித்தானியாவில் அரிய நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 19 வயதான இந்திய யுவதியின் பெயரை பகிரங்கப்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பிரித்தானிய வைத்தியதுறை, நீதித்துறை, சுதிக்ஷா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்காக அவரது மரணம் மாறியுள்ளது.
சுதிக்ஷா, அபூர்வ மைட்டோகாண்ட்ரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். சுதிக்ஷா ஓராண்டாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வட அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
இது என்னுடைய விருப்பம், உயிரிழக்க நேரிடும் என்றாலும், வாழ முயற்சி செய்ய விரும்புகிறேன் என்று வாய் விட்டே சொல்லியிருக்கிறார் சுதிக்ஷா.
மனநல மருத்துவர் ஒருவருடனான உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் வேகமாக உயிரிழந்துகொண்டிருப்பதாகக் கூறியது மருத்துவமனை.
கடைசியாக நீதிமன்றம் காப்பாற்றும் என எதிர்பார்த்து நீதிமன்றம் சென்றால், நீதிமன்றமோ, வழக்கில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டதுடன், நீதிபதி திருமதி ஜஸ்டிஸ் ராபர்ட்ஸ் தன் சிகிச்சை குறித்து முடிவெடுக்கும் நிலையில் சுதிக்ஷாவின் மன நிலை இல்லை என்றும் தீர்ப்பை அளித்துள்ளார்.
மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதால், சுதிக்ஷாவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுவதற்காக நிதி திரட்டமுடியாமல் போயுள்ளது அவரது குடும்பத்துக்கு.
தானாக முடிவெடுக்க முடியாதவர்களுக்காக இயங்கும் Court of Protection என்னும் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்திருந்த நிலையில், வெளிநாடு சென்று சிகிச்சை பெறவேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாமலே கண்ணை மூடிவிட்டார் சுதிக்ஷா.
செப்டம்பர் 12அம் திகதி சுதிக்ஷா திருமலேஷ் மரணமடைந்தார்.
இந்நிலையில், தாங்கள் மருத்துவ அமைப்பாலும், நீதி அமைப்பாலும் கைவிடப்பட்டுவிட்டதாக கூறி, தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்கள் சுதிக்ஷாவின் குடும்பத்தினர்.
சுதிக்ஷாவின் குடும்பத்தினர் நேற்று Court of Protection நீதிமன்றத்துக்குச் சென்றிருந்த நிலையில், இதுவரை வழக்கில் சுதிக்ஷாவின் பெயர் ST என்று மட்டுமே குறிப்பிடப்பட்ட நிலையில், அவரது பெயரை வெளியிட நீதிமன்றம் அனுமதியளித்தது.
சுதிக்ஷாவின் சகோதரரான வர்ஷன் நீதிமன்றத்துக்கு வெளியே பேசும்போது, தமது குடும்பம் மிரட்டப்பட்டதாகவும், வாய் அடைக்கப்பட்டதாகவும் கூறினார்.
“ஒரு வருட போராட்டம் மற்றும் மனவேதனைக்குப் பிறகு, இறுதியாக எங்கள் அழகான மகள் மற்றும் சகோதரியின் பெயரை அச்சமின்றி பகிரங்கமாகச் சொல்ல முடியும்: அவள் சுதிக்ஷா. அவள் சுதிக்ஷா திருமலேஷ் – ST அல்ல,” என்று அவர் கூறினார்.
“எங்கள் துயரம் மற்றும் நாம் அனுபவித்த எல்லாவற்றிலும் தொடர்ச்சியான அதிர்ச்சி இருந்தபோதிலும், இன்று நம்மில் ஒரு பகுதியினர் நிம்மதியாக உள்ளனர்.
சுதிக்ஷா ஒரு அற்புதமான மகள் மற்றும் சகோதரி, நாங்கள் என்றென்றும் போற்றுவோம். அவள் இல்லாத வாழ்க்கையை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது.
நாங்கள் பழிவாங்குவதற்காக வரவில்லை, எங்களுக்கு நீதி வேண்டும், சுதிக்ஷாவின் கதையை நாங்கள் வெளி உலகுக்குச் சொல்ல வேண்டும்.சுதிக்ஷாவுக்காக தங்களால் இயன்ற உதவிகளைச் செய்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், சுதிக்ஷா சாகவேண்டும் என்று மட்டுமே விரும்பிய சில மருத்துவர்களுக்கு, உங்களை நாங்கள் மன்னிக்கிறோம், நாங்கள் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நாங்கள், வாழ்வு, அன்பு மற்றும் மன்னிப்பை நம்புகிறோம்“ என்று கூறியுள்ளார்.