இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மற்றும் வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஆகியவற்றை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மற்றும் வங்கித் தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலங்கள் ஆகியவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தை இட்டு இன்று (14) சான்றுரைப்படுத்தினார்.
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி குழுநிலையில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. வங்கித் தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி ஜூலை மாதம் 21ஆம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதற்கமைய 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டம் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் என்ற பெயரில் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
சபாநாயகர் சான்றுரைப்படுத்தும் நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன மற்றும் சட்டவாக்கப் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான ஜனகாந்த சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.