ஆயிரக்கணக்கான பவுண்ஸ் பணம் பெற்றுக்கொண்டு, போலியான புகலிடக் கோரிக்கையை முன்வைக்க ஆலோசனை வழங்கி வந்த 3 சட்ட நிறுவனங்கள் பற்றிய தகவல்களை பிரித்தானியாவின் டெய்லி மெயில் வெளிப்படுத்தியதையடுத்து, அந்த சட்ட நிறுவனங்களை மூடியதுடன், அந்த நிறுவனங்களில் பணியாற்றிய சட்டத்தரணிகள் இடைநீக்கப்பட்டுள்ளனர்.
இடைநீக்கப்பட்டவர்களில் இலங்கை தமிழ் சட்டத்தரணி ஒருவரும் உள்ளடங்குகிறார்.
பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்குவதற்கான உரிமையை வென்றெடுப்பதற்காக அதிகாரிகளிடம் எப்படி பொய் கூறுவது என்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு குடிவரவு சட்ட நிறுவனங்கள் விளக்கமளித்து, போலி புகலிடக் கோரிக்கை விண்ணப்பதாரிகளை இந்த நிறுவனங்கள் உருவாக்கியதை இரகசிய கமராக்கள் மூலம் வீடியே பதிவு செய்து, டெய்லி மெயில் அம்பலப்படுத்தியது.
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கை சமர்ப்பிக்க வேண்டுமானால் சரியான காரணங்கள் இருக்க வேண்டும் என்பது பிரித்தானிய சட்டத்தில் காணப்படுகின்றது, இந்த சட்ட வரைவிற்கு உட்பட்டே ஏராளமான தமிழர்கள், மற்றும் வேறு நாட்டில் இருந்து வரும் அனைவரும் பிரித்தானியாவில் வாழ்வதற்கான உரிமையை பெற்றுள்ளனர்.
ஆனால் சில சட்ட நிறுவனங்கள் இந்த வாழ்விட உரிமையினை பெற்றுக்கொடுப்பதற்காக போலியான ஆதாரங்களினை உருவாக்கி அதற்கு அதிகமான பணத்தினை வசூலிப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரான வினாசித்தம்பி லிங்கஜோதி என்ற சட்டத்தரணி இடைநீக்கப்பட்டுள்ளார். இவர் முல்லைத்தீவு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.
அவரிடம் சட்ட உதவியை நாடிய ஒரு இளைஞனிடம், இந்தியாவில் அரசியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தாக்கப்பட்டு, அடிமைத் தொழிலில் தள்ளப்பட்டு, தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக உள்துறை அலுவலக அதிகாரிகளிடம் பொய்யாகச் சொல்லும்படி கூறினார்.
தென்மேற்கு லண்டனில் உள்ள கோலியர்ஸ் வூட்டில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபடி லிங்கஜோதி, இளைஞனுடன் பேசுவது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு ‘சில உளவியல் பிரச்சனைகள்’ இருப்பதாக பொய் சொல்ல வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கு சான்றாக அதிகாரிகளுக்கு கொடுக்க மன அழுத்த மாத்திரைகளை அவரே கொடுத்தார்.
‘உங்கள் கதையில், இந்த மருந்தையும் சேர்த்துக் கொள்கிறேன் – நீங்கள் [இந்தியாவில் சிறையில் இருந்து] விடுவிக்கப்பட்டபோது, நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்க்கச் சென்றீர்கள், அவர்கள் என்னிடம் உள்ள அனைத்து மருந்துகளையும் இங்கே எழுதினர்,” என்று அவர் கூறினார்.
ரஷீத் அஹ்மத் கான் என்ற மற்றொரு சட்டத்தரணி, ‘தன் உயிருக்கு ஆபத்து உள்ளது’ என்று கூறாவிட்டால், புகலிடம் கோரி விண்ணப்பிக்க தன்னால் உதவ முடியாது என்று கூறி, உள்துறை அலுவலகத்தில் பொய் சொல்லும்படி கூறினார்.
மலிக் நாசர் என்ற மற்றொரு சட்டத்தரணி, புகலிடக்கோரிக்கையாளர் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பினால், ‘துன்புறுத்தல் மற்றும் படுகொலை’ என்பன ஏற்படக்கூடும் என்ற உண்மையான பயம் அவருக்கு இருப்பதாகத் தோன்றுவதற்கு ‘ஆதாரங்களை உருவாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதேபோன்ற புகலிட வழக்குகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானமவற்றில் தான் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் பெருமையாகக் கூறியுள்ளார்.
சட்டத்தரணிகள் ஒழுங்குமுறை ஆணையக் குழுவின் தலைவர் அன்னா பிராட்லி, அடையாளம் காணப்பட்ட சட்டத்தரணிகளின் வெளிப்படையான நடத்தையால் தான் ‘அதிர்ச்சியடைந்ததாக’ கூறினார்.
இந்த ஆதாரங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, மூன்று நிறுவனங்களில் பணிபுரியும் சட்டத்தரணிகளை இடைநீக்கம் செய்வது மற்றும் இந்த நிறுவனங்களை மூடுவது உள்ளிட்ட ‘அவசர நடவடிக்கை’யை ஒழுங்குபடுத்தியதாக அவர் கூறினார்.
இங்கிலாந்துக்கு வந்த பொருளாதார அகதியாக நிருபர் ஒருவர் நடித்து இந்த சட்டத்தரணிகளை இரகசியமாக படம் பிடித்துள்ளார்.