மேற்கு வங்கத்தில் தினசரி கூலித் தொழிலாளியாக வாழும் முகமது நசிருல்லா மண்டல், தன்னுடைய கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அவரது வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி வரவு வைக்கப்பட்டதால் ஒரேநாள் இரவில் கோடீஸ்வரரானார்.
தனது வங்கிக் கணக்கில் வெறும் 17 ரூபாய் மட்டுமே இருந்த முகமது நசிருல்லாவுக்கு இந்த விவரம் கொல்கத்தா சைபர் கிரைம் போலீசார் கூறிய பிறகு தெரிந்ததுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பாசுதேப்பூர் கிராமத்தில் வசிக்கும் முகமது நசிருல்லா மண்டல் வீட்டுக்கு கொல்கத்தா சைபர் கிரைம் போலீசார் சென்றனர். அவரிடம் வழக்கு தொடர்பான நோட்டீஸ் கொடுத்து, ‘உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கி நிர்வாகம் புகார் அளித்ததன் அடிப்படையில் உங்கள் மீது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.
போலீசாரின் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்த முகமது நசிருல்லா தனது கூகுள் பேயில் பார்த்துள்ளார். அவரால் நம்பமுடியவில்லை. ஏழு இலக்கங்களில் அவருடைய வங்கி சேமிப்புக் கணக்கில் இருப்புத்தொகை காட்டியது.
பரிவர்த்தனை பற்றி விசாரிக்க பாஸ்புக்குடன் வங்கி கிளைக்கு சென்றார் நசிருல்லா. வங்கியில் கேட்டபோது, ரூ100 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது உறுதியானது. பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தாக கூறினார்.
காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதால் மேற்கொண்டு எந்தத் தகவலும் அளிக்க முடியாது என்று வங்கி அதிகாரிகள் கூறிவிட்டனர். அவரது வங்கிக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. ரூ100 கோடி டெபாசிட் செய்தது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘இவ்வளவு பணத்தை நான் கனவில் கூட நினைத்துப் பார்த்தது கிடையாது.. இந்தப் பணம் எப்படி என் கணக்கில் வந்தது என்பது எனக்கு தெரியவில்லை. நான் தினக்கூலியாக வேலை செய்கிறேன். காவல்துறையினரால் தொடரப்படும் வழக்கின் பயத்தில் உள்ளேன். என் வீட்டில் உள்ளவர்கள் கதறி அழுகின்றனர். யாருடைய பணமாக இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பணத்தை வைத்து என்னால் என்ன செய்ய முடியும்? என்னுடைய நிம்மதி தொலைந்தது’ என்கிறார் நசிருல்லா.