கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான வழக்கில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிற்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ரங்காவை ரூ.20,000 ரொக்கப் பிணையிலும், ரூ. 5 மில்லியன் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுவித்து பதில் நீதவான் பண்டார இளங்கசிங்க உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீரங்கா தீவிரமாகப் பங்கேற்றதாகவும், சட்டவிரோதமான கூட்டத்தில் அங்கம் வகித்ததன் பின்னர் சொத்துக்களை சேதப்படுத்துவதற்கு உதவியதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபராகப் பெயரிட்டிருந்தனர்.
சொத்துக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காகவும் சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்படலாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், அவர் ஒரு ஊடகவியலாளராக கடமையாற்றிய வேளையில், அவரது கட்சிக்காரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார் என்று பிரதிவாதி சட்டத்தரணி வாதிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெ.ஸ்ரீ ரங்காவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தீயிட்டு கொளுத்தியதுடன், சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது.
2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாட்சிகளிடம் செல்வாக்குச் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.




