நாயை வேட்டையாட வந்த சிறுத்தையொன்று தாக்கியதில் படுகாயமடைந்த ஒருவர், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பொகவந்தலாவை, டின்சின் தோட்டத்தில் நேற்று (1) இடம்பெற்றது.
அந்த தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலைக்கு அண்மையில் தேயிலை தோட்டத்துக்கு இரசாயன கலவை தெளித்துக் கொண்டிருந்த தொழிலாளியின் மீதே சிறுத்தை தாக்குதல் நடத்தியது.
காலை 10 மணியளவில் அவருக்கு மிக அண்மையில் நாயொன்று அவலக்குரல் எழுப்பியுள்ளது. அந்த இடத்திற்கு தொழிலாளி சென்றுள்ளார்.
நாயை விட்டுவிட்டு தொழிலாளி மீது சிறுத்தை தாக்கியுள்ளது.
அங்கு பணியிலிருந்த ஏனைய தொழிலாளிகள் சத்தமிட்டதை தொடர்ந்து சிறுத்தை தப்பியோடியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடுமையாக பாதிக்கப்பட்ட நாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தோட்டத்தில் செல்லப்பிரணிகளாக வளர்க்கப்படும் நாய்கள், கோழிகள் அடிக்கடி காணாமல் போவதாகவும், சிறுத்தைகளின் நடமாட்டம் இங்கு அதிகமென்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.