தென்னிலங்கை பௌத்த பிக்குகளின் மேல் பாயாத சட்டம் வடக்கில் இந்து மதகுருவின் மீது பாய்வது ஏன்?: நீதிமன்றத்தில் கே.வி.தவராசா காட்டம்!

Date:

தென்னிலங்கையில் போராட்டங்களில் ஈடுபடும் பௌத்த பிக்குகள் மீது பொலிசார் நடவடிக்கையெடுப்பதில்லை. மாறாக, வடக்கில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபடும் இந்து மதகுரு வேலன் சுவாமிகள் மீது அனைத்து வழக்குகளும் பதிவு செய்யப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழில் நடந்த நிகழ்வுகளிற்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டார்கள் என தெரிவு செய்யப்பட்ட 7 பேருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசார் தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடந்த போது இதனை தெரிவித்தார்.

இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட 7 பேரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

முன்னதாக, 7 பேர் மீதும் பொலிசார் தாக்கல் செய்த பி அறிக்கையில்,

உள்ளூராட்சி சட்டவிதிகள் 81, 81 பி இன் கீழ் இவ்வாறான ஊர்வலங்கள், கூட்டங்களை நடத்த முடியாது. இந்த போராட்டத்தினால் பொதுமக்களிற்கு அசௌகரியம் ஏற்பட்டது, பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 15வது பிரிவின் கீழ் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது என ஒலிபெருக்கியில் அறிவித்தோம். இந்த போராட்டத்தால் பொதுமக்களிற்கு இழப்பு ஏற்பட்டு, அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என  குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா பூர்வாங்க ஆட்சேபணையை முன்வைத்தார்.

பொலிசார் குறிப்பிட்டதை போல சட்ட ஏற்பாடுகள் இல்லை, உள்ளூராட்சி சட்டவிதிகள் 81, 81 பி இன் கீழ் வரும் சம்பவங்கள் தேர்தலுடன் தொடர்புடையவை. ஆனால் இது தேர்தலுடன் தொடர்புடைய ஒரு பேரணியல்ல. ஆகவே, குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

போராட்டத்தால் பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவ்வாறு பாதிக்கப்பட்டதாக யாராவது முறைப்பாடு செய்துள்ளார்களா? இல்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து பேரணி புறப்பட்டு மட்டக்களப்பு சென்றது. மட்டக்களப்பிலும் பல கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், எந்த பொலிஸ் நிலையத்தின் சார்பிலும் வழக்கு தாக்கல் செய்யவில்லை. யாழ்ப்பாண பொலிசார் மட்டுமே வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

சட்டம் தெரியாமல், சட்டத்தை புரிந்து கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும்.

இந்த வழக்கில் வேலன் சுவாமியை 7வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கில் எத்தனையே போராட்டங்கள் நடக்கின்றன. அதில் பௌத்த பிக்குகள் கலந்து கொள்கிறார்கள். பொலிசார் அதை கண்டுகொள்வதில்லை. அண்மையில் பௌத்த பிக்குகளால் 13வது திருத்தம் தீயிட்டு எரிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் சார்பில் வேலன் சுவாமியென்ற ஒரேயொரு இந்து மதகுருதான் மக்களிற்காக குரல் கொடுக்கிறார். அவரை எல்லா வழக்கிலும் பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளனர். அவர் இந்த போராட்டங்களை ஒருங்கிணைக்கவில்லை. கலந்து கொண்டது மட்டும்தான். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர். இதில் 7 பேரை மாத்திரமே தெரிவு செய்துள்ளனர்.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பொலிசார் கவலைப்படும் முதல் சந்தர்ப்பம் இது. ஆனால், பொலிசாருக்கு எதிராகத்தான் அடிப்படை மனித உரிமை ஆணை உருவானது. பொலிசார், அரசாங்கத்திற்கு எதிராகத்தான் மனித உரிமை மீறல் வழக்கு பதிவு செய்யலாம் என்றார்.

போராட்டத்தால் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் யாராவது முறைப்பாடு செய்தனரா என நீதவான் ஆனந்தராஜா பொலிசாரிடம் கேட்டார். பொலிசார் இல்லையென்றனர்.

இதையடுத்து, பிரதிவாதிகளிற்கு பிணை வழங்குவதாக நீதவான் அறிவித்தார்.

பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கே.வி.தவராசா, என்.சிறிகாந்தா ஆகியோர், இந்த வழக்கை தொடர்வதா இல்லையா என்பது குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுமாறு பொலிசாரை அறுவுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, வழக்கை தொடர்வதா இல்லையா என்பது பற்றி சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், பிரதிவாதிகளை பொலிசாரிடம் வாக்குமூலமளிக்கவும் குறிப்பிடப்பட்டது. எனினும், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் அதை ஆட்சேபித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ்  நிலையம் சென்று வாக்குமூலமளிக்க முடியாது என்றும், தேவையான விபரத்தை பொலிசார் நீதிமன்றத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்டனர்.

நீதவான் இதற்கான கட்டளையை வழங்கினார். இதையடுத்து, நீதிமன்றத்திலேயே பொலிசார் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், இரண்டாவது பிரதிவாதி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், நான்காவது பிரதிவாதி ஈ.சரவணபவன், ஏழாவது பிரதிவாதி வேலன் சுவாமிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா முன்னிலையாகினார்.

மூன்றாவது பிரதிவாதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஐந்தாவது பிரதிவாதி எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையாகினார். செல்வம் அடைக்கலநாதன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அதற்கான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஆறாவது பிரதிவிதி வி.வமணிவண்ணன் முன்னிலையாகவில்லை. அவருக்கு பிறிதொரு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்