24.6 C
Jaffna
January 21, 2025
Pagetamil
இலங்கை கிழக்கு

கல்முனையை தமிழ் தரப்பு விட்டுத்தராவிட்டால் இனப்பிரச்சினை தீர்வில் ஒத்துழையோம்: எச்.எம்.எம்.ஹரீஸ்

கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வரா விட்டால் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் பரஸ்பரம் புரிந்துணர்வோடு ஒன்றித்து பயணிக்க முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படலாம் என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

சமகால அரசியல் விடயங்கள் குறித்து அண்மையில் கல்முனையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் ஹரீஸ் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்;

இந்த நாட்டில் மத்திய அரசுடன் முழுமையாக இருந்து நிர்வாகம் செய்ய முடியாது என்பதற்காகவே 1948ஆம் ஆண்டு தொடக்கம் சமஷ்டி தீர்வின் அடிப்படையிலான அதிகாரப்பகிர்வின் ஊடாக வடக்கு, கிழக்கில் ஒரு தனியான நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் சமூகம் கோரி வருகின்றது. அதற்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதில் நியாயமும் இருந்தது. அதனால்தான் எமது பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா போன்றோர் தமிழ் தலைமைகளுடன் இணைந்து அப்போராட்டங்களில் முக்கிய பங்காற்றியிருந்தனர். எங்களுடைய இப்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கூட தமிழ் சமூகத்தின் அதிகாரப் பகிர்வுக்காக பாடுபடுகின்ற ஒருவராக இருக்கின்றார்.

இந்நிலையில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்தில் ஒரு கொள்கையுடனும் அம்பாறையில் இன்னொரு கொள்கையுடனும் செயற்படக்கூடாது என்று நான் வேண்டுகோள் விடுகின்றேன்.

மத்திய அரசின் கீழ் தமது நிர்வாகத்தை முழுமையாக செய்ய முடியாது என்பதற்காகவே மாகாண நிர்வாக அதிகாரத்தை கோருகின்ற தமிழ் தரப்பினர் அம்பாறை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 67 வீதமான தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் இங்கு மொழி ரீதியாக ஒரு கரையோர மாவட்டத்தை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றபோது, அதற்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு, அவ்வாறான ஒரு மாவட்டம் உருவாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் உள்ளக அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கல்முனை விவகாரத்திலும் கூட தமிழ் பேசும் முஸ்லிம்களுடன் இணைந்து நிர்வாகம் செய்ய முடியாது எனக்கூறுகின்ற தமிழ் தரப்பினர், அம்பாறை மாவட்ட நிர்வாகம் என்று வருகின்றபோது தமிழ் மொழி ரீதியிலான கரையோர மாவட்டத்தை மறுதலித்து சிங்கள மொழி ரீதியிலான நிர்வாகத்தினருடன் இணைந்து செயற்பட தயார் என்கின்றனர். ஒட்டு மொத்தமாக வடக்கு, கிழக்கு என்று வருகின்றபோது பெரும்பான்மையின ஆட்சியையும் சிங்கள மொழியையும் நிராகரித்து வருகின்ற நிலையில்தான் கல்முனை மற்றும் கரையோர மாவட்ட விவகாரங்களில் மாற்று நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

இத்தகைய இரட்டை நிலைப்பாட்டைத்தான் தமிழ் கூட்டமைப்பு கைவிட வேண்டும் எனக் கோருகின்றேன். தலைவர் சம்மந்தன் ஐயா, சுமந்திரன் எம்.பி. மற்றும் தமிழ் எம்.பி.க்களிடம் இதனை மிகவும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றோம்.

இவ்விடயம் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களை சிந்திக்க வைக்கின்றது. இதுவொரு நியாயமற்ற போக்கு, மனச்சாட்சிக்கு விரோதமானது. தமிழருக்கான அதிகாரப்பகிர்வுத் தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை தமிழ் அரசியல் தலைமைகள் கொண்டிருப்பதானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலை நீடிக்குமாயின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் தமிழ் சமூகத்துடன் முஸ்லிம் சமூகம் புரிந்துணர்வுடன் ஒன்றித்து பயணிக்க முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படலாம். குறிப்பாக கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்புடனான தீர்வுக்கு முன்வராமல் தமிழ் தரப்பு மறுக்கின்றபோது நிச்சயமாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் முஸ்லிம் சமூகம் வேறு திசைக்கு கொண்டு செல்லப்படலாம் என்ற செய்தியை சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

அதேவேளை கல்முனை செயலக விடயத்தில் நாங்கள் எதுவும் செய்யாமல் மௌனம் காத்து வருவதாக எமது முஸ்லிம் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், நான் மற்றும் மேயர் உட்பட எல்லோரும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எல்லா மட்டங்களிலும் செய்து கொண்டுதான் இருக்கின்றோம். அது தொடர்பிலான எல்லா விடயங்களையும் ஊடகங்களில் பறைசாற்றிக் கொண்டிருக்க முடியாது.

இந்த விவகாரத்தில் நாங்கள் பாரிய அழுத்தங்களுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் இந்த விடயத்தில் மிகவும் கரிசனையும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். ஏனைய முஸ்லிம் எம்.பி.க்களுடனும் பேசியிருக்கின்றோம். அவர்களும் உரிய இடங்களில் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றனர் என்று ஹரீஸ் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, எம்.எம்.நிஸார், ஏ.எம்.சித்தி நஸ்ரின், முன்னாள் உறுப்பினர் ஷரீப் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ.பாவா, கல்முனை 12ஆம் வட்டார மு.கா. வேட்பாளர் எம்.பளீல் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

-பாரூக் சிஹான் –

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

1ம் தர மாணவர் சேர்க்கை – இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

east tamil

மகிந்த 4.6 மில்லியன் வாடகை செலுத்த வேண்டும் – அனுர

east tamil

செல்வம் அடைக்கலநாதனுக்கு பிடியாணை: பின்னணி என்ன?

Pagetamil

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

Pagetamil

சம்பூரில் ஜப்பான் தூதுவர் குழுவின் விஜயம்: குளம் புனரமைப்பு திட்டம்

east tamil

Leave a Comment