காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் மேலதிக சாட்சியங்களை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (27) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இதற்கமைய, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாகியுள்ளதுடன், யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் குறித்த வழக்கு விசாரணையில் காணொளித் தொழில்நுட்பம் (Zoom) ஊடாக அவர் சாட்சியமளிக்கவுள்ளார்.
வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது!
லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை இன்று வரை ஒத்திவைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய, இன்று மேலதிக சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரு அரசியல் செயற்பாட்டாளர்கள்!
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இரு அரசியல் செயற்பாட்டாளர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்திருந்தார்.
முன்னைய சாட்சியத்தில் கோட்டாபய தெரிவித்தது என்ன?
கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளித் தொழில்நுட்பம் ஊடாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ச சாட்சியமளித்திருந்தார்.
இதன்போது, சம்பவம் இடம்பெற்று பல வருடங்கள் கடந்துவிட்டதால், சில விடயங்கள் தமக்கு நினைவில் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கில் அவரிடம் மேலதிக சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.




