நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

Date:

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம் குறித்து உலக வங்கி எச்சரிக்கை

இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை அண்மித்திருந்தாலும், அதன் முன்னேற்றம் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்னும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

குடும்பங்களின் வருமானம் மற்றும் தொழிலாளர் சந்தை இன்னும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதால், அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் பொதுமக்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு

2026 ஒக்டோபர் மாத பணவீக்கத் தரவுகளின்படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் கீழ் உணவுப் பணவீக்கம் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் கீழ் உணவுப் பணவீக்கம் 8.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பாக உலக வங்கி நவம்பர் மாதம் வெளியிட்டுள்ள புதிய Global Food and Nutrition Security Update அறிக்கையிலும், இலங்கை உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் உணவுப் பொருட்களின் விலையேற்ற அழுத்தம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியிலும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட நாடுகளில் 33 சதவீதமான நாடுகளில் உணவுப் பணவீக்கம் தொடர்ந்து 5 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

மேலும், தரவுகள் பதிவுசெய்யப்பட்ட 153 நாடுகளில் 27 சதவீதமான நாடுகளில் உண்மையான உணவுப் பணவீக்கம், ஒட்டுமொத்த பணவீக்கத்தைவிட அதிக வேகத்தில் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தப் பெறுமதி 12 சதவீதமாகவே காணப்பட்டது.

எதிர்வரும் ஆண்டுகளிலும் விலையேற்றம் தொடரும் அபாயம்

உலக வங்கி கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிட்ட Commodity Markets Outlook அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டில் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் 10.3 சதவீதத்தாலும், 2027ஆம் ஆண்டில் 7.2 சதவீதத்தாலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

யுத்த மோதல்களால் விநியோகச் சேவைகள் பாதிக்கப்படுவதும், அதன் காரணமாகப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கான முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தகத் தடைகள் ஆகியவையும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.

உணவுப் பற்றாக்குறையைவிட மக்களின் வாங்கும் திறனே முக்கியப் பிரச்சினை

தெற்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் சவால் உணவுப் பற்றாக்குறையுடன் மட்டும் தொடர்புடையதல்ல என உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, மக்களின் கொள்வனவுத் திறன் குறைவடைதல், காலநிலைப் பாதிப்புகள், போக்குவரத்து மற்றும் எரிசக்திச் செலவுகள் அதிகரித்தல், சீரற்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவை உணவுப் பாதுகாப்பு தொடர்பான சவால்களை மேலும் தீவிரப்படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

எல் நினோ தாக்கம் குறித்த எச்சரிக்கை

இதற்கிடையில், காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் உணவுப் பாதுகாப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மிகவும் வலுவான எல் நினோ காலநிலை நிலைமை உருவாகும் சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் வழக்கத்தைவிடக் குறைந்த மழைவீழ்ச்சியும் அதிக வெப்பநிலையும் நிலவக்கூடிய அபாயம் காணப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இத்தகைய காலநிலை மாற்றங்கள் பயிர்ச்செய்கை மற்றும் உணவு உற்பத்தியில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

இலங்கையைப் பொறுத்தவரையில், எல் நினோ தாக்கத்தினால் விவசாய உற்பத்தித்திறன் மற்றும் நீர்வள முகாமைத்துவத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உலக வங்கியும் உலக உணவுத் திட்டமும் விசேட கவனம் செலுத்தியுள்ளன.

வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அதிக பாதிப்பு

கடந்த ஒக்டோபர் மாத தொடக்கத்தில் இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையிலும், நாட்டின் வறுமை நிலைமை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இலங்கையின் வறுமை விகிதம் இன்னும் 16.9 சதவீதமாக உயர்ந்த நிலையில் காணப்படுகிறது.

இதனால் உணவு மற்றும் எரிசக்திப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கும்போது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பு மேலும் பாதிக்கப்படக்கூடும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதாகக் கூறப்பட்டாலும், மக்களின் வருமானம், வாங்கும் திறன் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படும் முன்னேற்றமே அந்தப் பொருளாதார மீட்சியின் உண்மையான தாக்கத்தை வெளிப்படுத்தும் என்பதை உலக வங்கியின் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

spot_imgspot_img

More like this
Related

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்