யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பாடசாலை மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.
பாடசாலைக்குள் தாக்கப்பட்ட மாணவன், முச்சகர வண்டியில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதையடுத்து 119 அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தகவல் வழங்கியதாகவும் மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஆளுனர் செயலகத்தின் தலையீட்டையடுத்து மாணவன் தற்போது பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தெல்லிப்பளையிலுள்ள பிரபல்ய பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 16 வயதான மாணவனே தாக்கப்பட்டார்.
சில வாரங்களின் முன்னர், சக மாணவன் ஒருவரால் வகுப்பறைக்குள் வைத்து தாக்கப்பட்டு, செவிப்பகுதி பாதிப்புடன் இந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், பாடசாலைக்கு சென்ற போது, மாணவனை க.பொ.த சாதரணதர மாணவர்களுக்காக கருத்தரங்கில் அனுமதிக்கவில்லையென்றும் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் பாடசாலைக்கு தாமதமாக வந்ததாக குறிப்பிட்டு, மாணவனை குப்பை அள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், அப்போது குனிந்து குப்பை அள்ளியபோது வெள்ளை மேலாடை காற்சட்டைக்கு வெளியே வந்ததாகவும் மாணவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஆசிரியர் ஒருவர், சேட் வெளியே வந்துள்ளது என மாணவனை தாக்கியதாகவும், பின்னர் வழிபாட்டிடத்திற்கு சென்ற போது, யாரோ ஒரு மாணவன் தூசண வார்த்தை பாவித்ததாகவும், அது இந்த மாணவன் தான் என ஆசிரியர் ஒருவர், மாணவனின் கையை முறுக்கி, அதிபரிடம் அழைத்து சென்றதாகவும் மாணவன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதன்போது, அந்த மாணவனை ரௌடி என குறிப்பிட்டு அதிபரும், சில ஆசிரியர்களும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், மாணவனை முச்சக்கர வண்டியில் ஏற்றி, தாயார் நடத்தும் உணவகத்திற்கு முன்பாக இறக்கி விட்டு, தாயாரை எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைக்கு வருமாறு ஆசிரியர்கள் கூறிவிட்டு சென்றதாக முறையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, 119 அவசர இலக்கத்திற்கு தாயார் முறையிட்டதையடுத்து, தெல்லிப்பளை பொலிசார் இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்தனர்.
மாணவன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது மாணவன் வீடு திரும்பியுள்ளார்.




