ஈரான் தனது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை இரண்டு நாட்களுக்குள் மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. முன்னதாக, இதற்காக ஒரு வார கால அவகாசத்தை ஈரான் முன்மொழிந்திருந்தது.
“இந்தத் திட்டத்தை இரண்டு நாட்களுக்குள் செயல்படுத்த முடியும் என்பது, ஈரானின் நேர்மையான அணுகுமுறையைக் காட்டுகிறது” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்தார்.
“ஈரானின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பை மீட்டெடுக்கவும், பேச்சுவார்த்தை செயல்முறையை குறுகிய காலத்திற்குள் மீண்டும் தொடங்கவும் முடியும் என்று நாங்கள் கூறியுள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
மத்தியஸ்தர்கள் மூலமாக அமெரிக்காவுடன் செய்திகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதைப் பொறுத்தே “அனைத்தும் அமையும்” என்றும் அவர் கூறினார்.
“அதன்பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முடியும்.”
பெப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து, கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமான எரிசக்தி பாதையான ஹோர்முஸ் நீரிணையின் மீது தங்களுக்குக் கட்டுப்பாடு இருப்பதாக ஈரான் கூறி வருகிறது.
தங்கள் அனுமதியின்றி இந்த நீரிணையைக் கடக்க முயற்சிக்கும் கப்பல்களை ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருகிறது; இதற்குப் பதிலடியாக, ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா கடற்படை முற்றுகையை அமல்படுத்தியுள்ளது.
செப்டம்பர் மாதம், கத்தார் வழியாக அமெரிக்காவிடம் ஈரான் ஏழு நாள் திட்டமொன்றை முன்மொழிந்திருந்தது. அதன்படி, ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்றிய ஆறாவது நாளில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதாக இருந்தது.
இந்தக் கோரிக்கைகளில், மத்திய கிழக்கில் அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டு வருதல், வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவித்தல், அந்நாட்டின் எண்ணெய் துறை மீதான தடைகளை நீக்குதல் மற்றும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவை அடங்கும்.
ஓகஸ்ட் மாதத்திலிருந்து, ஈரானை “பொருளாதார ரீதியாக மூச்சுத்திணறச் செய்யும்” நோக்கில், அமெரிக்கா புதிய தடைகளை விதித்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளிலும் முக்கியமான தேர்தல்கள் நடைபெற்று வரும் சூழலில், ஈரானின் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்துவதற்கான அச்சுறுத்தல்களை அவை தீவிரப்படுத்தியுள்ளன.
சனிக்கிழமையன்று, ஈரானின் மத்திய பகுதியில் உள்ள ‘பிகாக்ஸ் மலை’ (Pickaxe Mountain) உள்ளிட்ட ஒன்று அல்லது இரண்டு இலக்குகளைத் தான் இன்னும் “கவனிக்க” வேண்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார். இது அணுசக்தி தொடர்பான தளம் என்று சந்தேகிக்கப்படுகிறது, ஆனால் ஈரான் இதை மறுத்து வருகிறது.
திங்கள்கிழமை நடைபெற்ற வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகாயி, “ஈரானுக்கு எதிராக எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலோ அல்லது எந்த வகையிலான ராணுவத் தாக்குதலோ நடத்தப்பட்டால், அதற்கு நாங்கள் சக்திவாய்ந்த, உடனடி மற்றும் முழுமையான பதிலடியைக் கொடுப்போம்” என்று எச்சரித்தார்.




