யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாவீரர்களை பூஜிக்கும் மாதத்திலே, எமது மக்களுக்கான அரசியல் கடமைகளை பொறுப்பேற்று, ஒரு புதிய அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற இலக்கோடு பயணிக்கின்ற போராளிகளாகிய நாம், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான ஒரு சிறந்த அரசியல் தலைமைத்துவமாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுடைய உத்தியோகபூர்வ அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியை நாம் இன்று அறிமுகம் செய்து வைக்கின்றோம்.
எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியை எமது தாயகப் பரப்பில் முன்னெடுத்துச் செல்லும் என்பதையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.
யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகளுக்கும் காலமாக எமது தாயக நிலப்பரப்பில் எமது மக்களுடைய வாழ்வுரிமையை வென்றெடுப்பதற்கான அரசியல் என்பது தமிழர் தரப்பு அரசியலால் முன்னெடுக்கப்பட்ட அத்தனை வேலைத்திட்டங்களும் ஒரு பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற நிலையிலே, நாம் இந்த கடமைகளை முற்றுமுழுதாக பொறுப்பெடுக்கின்றோம்.
இன்றிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியானது தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக தனது கடமைகளையும் முழுமையாக பொறுப்பேற்று செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அந்த வகையிலே, விடுதலைப் புலிகளின் அரசியல் கட்டமைப்பாக சில மாதங்களாக செயல்பட்ட போராளிகளாகிய நாம், இன்றிலிருந்து ஒரு அரசியல் கட்சியாக விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியாக செயல்பட தீர்மானித்துள்ளோம். இந்த விடயத்தை நாங்கள் மக்களுக்கு அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அதன் அடிப்படையில், விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியினுடைய பொதுச்செயலாளராக அந்த கட்சியினுடைய கடமைகளை நான் பொறுப்பெடுத்திருக்கின்றேன்.
எமது கட்சியினுடைய அனைத்து மாவட்ட செயல்பாட்டு கிளைகளும், வட்டார கிளைகள், அனைத்து விடயங்களும் இங்கே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது.
நாங்கள் எதிர்வருகின்ற ஜனவரி மாதம் இந்த கட்சியினுடைய தேசிய மாநாட்டை அறிவிக்க இருக்கின்றோம். அந்த மாநாட்டில் எமது மத்திய செயற்குழுவினுடைய செயல்பாடுகள் தொடர்பாகவும், எமது கட்சியினுடைய கொள்கைகள் தொடர்பாகவும் அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் என்பதையும் நாங்கள் மக்களுக்கு சொல்கின்றோம்.
நாம் வன்முறையோ, இனவாதத்தையோ, மதவாதத்தையோ விரும்பவில்லை.
நாம் ஒரு தூய்மையான அரசியலையே முன்னெடுத்துச் செல்ல விரும்புகின்றோம். எமது அரசியல் நடவடிக்கைகள் அத்தனையும் எமது மக்களுடைய சுயநிர்ணய உரிமைகள் அங்கீகரிக்கப்படும் வரை தொடர்ந்து இங்கே முன்னெடுக்கப்படும்.
நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சமஸ்டி தீர்வையே எமது இலக்காகக் கொண்டு நாம் பயணிக்கின்றோம். இந்த சூழலில் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலே எமது அரசியல் செயல்பாடுகளை அங்கீகரித்து, நமக்கு இடர்பாடுகள் வழங்காது, ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டும் என்பதையும் இந்த அரசாங்கத்துக்கு நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
இதேபோன்று சர்வதேச நாடுகளுக்கும் நாம் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றோம். எமது ஆயுதப் போராட்டம் நிறைவு பெற்று, 2009 ஆம் ஆண்டு எமது தலைமைத்துவத்தால் உருவாக்கப்பட்ட எமது அரசியல் கட்டமைப்பு அழிக்கப்பட்ட பின்னர், தொடர்ச்சியாக தாயக நிலப்பரப்பிலே அரசியல் கட்சிகளோடு இணைந்த ஒரு போராளிகளின் அரசியல் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தினால், நேரடியாகவே விடுதலைப் புலிகள் இந்த அரசியலை முற்றுமுழுதாக பொறுப்பெடுத்திருக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியானது ஒரு ஜனநாயகத்தின் அடிப்படையிலே எங்களுடைய மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து போராடும். அவர்களுடைய அந்த செயல்பாடுகளுக்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் முன்வந்து நமக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இந்த சூழலில் வடகிழக்கு தாயகப் பகுதியில் வாழ்கின்ற அத்தனை மக்களும் ஒன்றிணைந்து எமது அரசியல் போராட்டத்தை பலப்படுத்தி எமது வாழ்வுரிமையை வென்றெடுப்போம்.
இந்த கட்சியை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றது. கட்சியினுடைய சின்னம் என்பது புலி சின்னகமாகத்தான் இருந்தது. இன்று அந்த சின்னம் இலங்கையினுடைய தேர்தல் திணைக்களத்தினுடைய சின்னங்கள் குறித்த பட்டியலிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றது. நாங்கள் அதற்கு என்ன முடிவெடுப்பது என்பது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.
விரைவாக நாங்கள் கட்சியினுடைய சின்னத்தை பெற்று எங்களது அனைத்து பதிவு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
ஆயுதப் போராட்டத்தை நாங்கள் மீள் உருவாக்கம் செய்யவில்லை. விடுதலைப் புலிகளுடைய அரசியல் கட்டமைப்பை நாங்கள் மீள் உருவாக்கம் செய்கிறோம். நாங்கள் புலிகள் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதில் மாற்றமில்லை.
ஆயுத போராட்டம் நிறைவடைந்தது என்பதை நாங்கள் தெளிவாக சொல்லுகின்றோம். ஆயுத போராட்டத்தை நாங்கள் இங்கே மீள் உருவாக்கவில்லை.
அரசியல் ரீதியான போராட்டத்தை நாங்கள் மீள் உருவாக்குகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை – என்றார்.




