இலங்கையின் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் பாரிய மறுசீரமைப்பு அவசியமாக உள்ளது : சிறுபான்மைச் சமூகங்கள் கல்வி மூலம் தமது ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும் – காரைதீவில் சுமந்திரன் தெரிவிப்பு

Date:

இலங்கையின் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் பாரிய மறுசீரமைப்பு அவசியமாக உள்ளது. கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்படவிருந்த கல்வி மறுசீரமைப்பு பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ளது. அது விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய பாடசாலைக் கல்வியின் ஆரம்ப நிலைகள் முதல் மாணவர்களை இன்றைய உலகின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தயார்படுத்துவதில் போதிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. எதிர்காலத்தில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும், புதிய உலகின் சவால்களை எதிர்கொள்ளவும் மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் கல்வி முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனின் ஏற்பாட்டிலும் தலைமையிலும், 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் சாதனையாளர் கௌரவிப்பு விழா நேற்று (29) வியாழக்கிழமை காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு உற்சாகமளிக்கும் வகையில் இவ்வாறான நிகழ்வை ஏற்பாடு செய்த காரைதீவு பிரதேச சபைக்கு முதலில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கல்வியின் முக்கியத்துவம் குறித்து நாம் பாரம்பரியமாகப் பேசிவந்தாலும், இன்றைய சூழலில் அதன் அவசியத்தை ஆழமாக உணர வேண்டியுள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருப்பதால், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது. இத்தகைய சூழலில், எண்ணிக்கை அடிப்படையில் ஏற்படக்கூடிய குறைபாடுகளையும் பின்னடைவுகளையும் ஈடுசெய்வதற்கு கல்வியின் ஊடாக எமது ஆளுமையையும் திறமைகளையும் வெளிப்படுத்துவது மிகவும் அவசியமானது.
கல்வியில் முன்னேற்றமடைவதன் மூலம், நாட்டின் முக்கியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் இடங்களில் எமது மக்களும் பங்கேற்று, தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பான நிலைகளில் அமரக்கூடிய வாய்ப்புகள் உருவாக வேண்டும்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறாமல் போகலாம் என நான் கருதுகின்றேன். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை சிறுவயது மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. இந்தப் பரீட்சை அவசியமானதல்ல என்ற கருத்தைக் கொண்டவர்களில் நானும் ஒருவன்.
எனினும், இளம் வயதிலேயே இத்தகைய அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து, அவற்றையும் தாண்டி சித்தியடைந்த மாணவர்களை நாம் பாராட்ட வேண்டும். அவர்களுக்கு உற்சாகமளிக்க வேண்டும். அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு நடைமுறைக்கு வரும்போது அதனை வரவேற்று, எதிர்காலத்துக்குத் தேவையான திறன்களையும் அறிவையும் மாணவர்களுக்கு வழங்குவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேநேரம், இப்பரீட்சைக்குத் தோற்றிய போதிலும் சித்தியடையாத மாணவர்களையும் தோல்வியடைந்தவர்களாகக் கருதக்கூடாது. பரீட்சைக்குத் தோற்றுவதற்கான துணிச்சலையும் முயற்சியையும் வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் உரிய ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்க வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலத்தை ஒரு பரீட்சையின் பெறுபேற்றைக் கொண்டு மட்டும் தீர்மானிக்காமல், அவர்களுடைய தனித்திறமைகளையும் ஆளுமைகளையும் அடையாளம் கண்டு வளர்ப்பதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும் என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தினார்.
spot_imgspot_img

More like this
Related

கிரிஷ் வழக்கில் நாமலுக்கு பிணை: ஆனாலும் சிறைவாசம் தொடரும்!

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03), சர்ச்சைக்குரிய 'கிரிஷ்'  பரிவர்த்தனை தொடர்பான...

TIN இலக்கத்திற்கு முண்டியடிக்கத் தேவையில்லை

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மக்கள் வரி செலுத்துவோர்...

நவம்பரில் 3 எரிவாயு கப்பல்கள் வருகின்றன!

2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டுவருவதற்குத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்