விஹாரமஹாதேவி பூங்காவில் சத்யாகிரகம் நடத்திய பாலங்கொட கஸ்ஸப தேரர், நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள ‘தி கிங்ஸ்பரி’ ஹோட்டலுக்குச் சென்றதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை எழுந்தது. முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினருடன் அவர் அங்கு இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியது சிசிரிவி காட்சிகள் மூலம் அம்பலமானது.
பிக்குகளின் போராட்டம், மஹிந்த அணியின் மூலம் இயக்கப்படும் ஒரு சதி முயற்சியென்ற பரவலான கருத்தை சிசிரிவி காட்சிகள் வலுப்படுத்தின.
எனினும், இந்த ‘சத்யாகிரகம்’ அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டுகளை மறுத்த கஸ்ஸப தேரர், திடீரென ஏற்பட்ட கடுமையான உடல்நலக்குறைவு காரணமாகவே தான் ‘தி கிங்ஸ்பரி’ ஹோட்டலுக்குச் செல்ல நேரிட்டதாக விளக்கமளித்தார்.
சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு தனக்கு 102 டிகிரி வரை கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதாகவும், உடல் நடுங்கத் தொடங்கியதாகவும் அவர் கூறினார். இதனால், தன்னை ஆதரிக்கும் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓய்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு மருத்துவக் குழுவினர் வந்து சிகிச்சை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த ஹோட்டல் நிர்வாகத்தின் மீது கஸ்ஸப தேரர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்துச் சென்ற நிலையில், அவர்கள் தனது மிகவும் தனிப்பட்ட மற்றும் உணர்திறன் மிக்க தகவல்களை ஊடகங்களுக்குக் கசியவிட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார். சர்வதேசத் தரத்திலான ஒரு ஹோட்டல் இத்தகைய தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது மிகவும் தீவிரமான விவகாரம் என்றும், இது வெளிநாட்டினர் இத்தகைய ஹோட்டல்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கமோ அல்லது அரசாங்கத்திற்கு ஆதரவான தரப்பினரோ, ‘சத்யாகிரக’ப் போராட்டத்தில் பங்கேற்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். ‘சத்யாகிரக’ப் போராட்டத்திற்கு வரும் வாகனங்களைப் புகைப்படம் எடுத்து, அதன் உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அந்தத் தகவல்களை ஊடகங்களுக்குக் கசியவிடுவதன் மூலம் பொதுமக்களை அச்சுறுத்த யாருக்கும் உரிமை இல்லை என்று அவர் கூறினார். தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவதூறுப் பிரச்சாரங்கள் சில தரப்பினரின் ‘ஒப்பந்த வேலைகளாகவே’ (contract jobs) செய்யப்படுகின்றன என்று பாலங்கொட கஸ்ஸப தேரர் கூறினார்.
கா்யப்ப தேரர் இவ்வாறு கதைவிட்டாலும், அங்கு மருத்துவர்கள் வந்து சிகிச்சையளித்ததாக தகவலேதும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.




