அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘பிரஜாசக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ், வரையறுக்கப்பட்ட கல்லோயா விளைபொருள் விவசாய உற்பத்தி கூட்டுறவு அமைப்பிற்கு 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான விவசாய உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டின் வறுமை ஒழிப்பு, கிராமிய வலுவூட்டல், சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகையை நோக்கமாகக் கொண்டு கிராமிய வலுவூட்டல், சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ‘பிரஜாசக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ், இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு 27 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிதியின் கீழ் சமூக அபிவிருத்திச் சபையினால் ஏழு திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் முதலியார் வட்டை விவசாயப் பாதை அபிவிருத்தி மற்றும் குகுல் பார்ம் வீதி புனரமைப்பு ஆகிய இரண்டு திட்டங்கள் ஏற்கனவே நிறைவுசெய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக மூன்றாவது திட்டமாக, வரையறுக்கப்பட்ட கல்லோயா விளைபொருள் விவசாய உற்பத்தி கூட்டுறவு அமைப்பின் விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான மஞ்சுள ரத்நாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விவசாய அமைப்பிற்கான உபகரணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
கிராமிய விவசாய உற்பத்திகளை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்ஸார், இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். தாஹா செய்னுடீன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், சமூக வலுவூட்டல் மற்றும் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் மற்றும் குறித்த கூட்டுறவு அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




