ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித குணரத்ன எனப்படும் ‘குடு சலிந்து’வுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அந்த நீதிமன்றத்தின் பிஸ்கல் மற்றும் அழைப்பாணைகளுக்கான பொறுப்பாகக் கடமையாற்றிய உத்தியோகத்தர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட வழக்குக் கோப்புகள் காணாமல்போனமை தொடர்பாக பானந்துறை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கடந்த 1 ஆம் திகதி பாணந்துறை தெற்கு தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் ‘பி’ அறிக்கையின் ஊடாக நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிக்கை செய்த பின்னர், பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், நீதிமன்றப் பதிவாளர் பொலிஸில் முறைப்பாடு செய்த மறுநாளே, அதாவது செப்டம்பர் 2 ஆம் திகதியன்றே அந்த நீதிமன்ற உத்தியோகத்தர் தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் தெரியவந்துள்ளது.
‘குடு சலிந்து’வின் நெறிப்படுத்தலில் பாணந்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்ற மனிதக் கொலை தொடர்பான வழக்குக் கோப்பு ஒன்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பணச்சலவைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்கு தொடர்பான கோப்பு ஒன்றுமே இவ்வாறு காணாமல்போயுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதுவரை பாணந்துறை நீதிமன்றத்தில் கடமையாற்றும் 07 பெண் உத்தியோகத்தர்கள் உட்பட 10 பேரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.




