கல்முனை கல்வி வலய காரைதீவு கல்விக் கோட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 48 மாணவர்கள் சித்தியடைந்து சிறப்பான பெறுபேற்றைப் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் காரைதீவு பாடசாலைகளைச் சேர்ந்த 33 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளதாக காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஆ. சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.
பாடசாலை ரீதியான பெறுபேறுகளின் அடிப்படையில், இராமகிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலையில் 17 மாணவர்களும், இராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையில் 7 மாணவர்களும், சண்முகா மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும், விஷ்ணு வித்தியாலயத்தில் 3 மாணவர்களும், விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், கண்ணகி இந்து வித்தியாலயத்தில் ஒரு மாணவரும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இதன்படி, காரைதீவு பிரதேசத்திலுள்ள குறித்த ஆறு பாடசாலைகளிலிருந்து மொத்தம் 33 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.
அதேவேளை, மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் 12 மாணவர்களும், மாளிகைக்காடு சபினா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் ஒரு மாணவரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இதனூடாக மேலும் 15 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
காரைதீவு கல்விக் கோட்டத்தின் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. 2024ஆம் ஆண்டில் 37 மாணவர்களும், 2025ஆம் ஆண்டில் 41 மாணவர்களும், 2026ஆம் ஆண்டில் 48 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
இதன்படி, மூன்று ஆண்டுகளில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 37 இலிருந்து 48 ஆக அதிகரித்துள்ளமை, காரைதீவு கல்விக் கோட்டத்தின் கல்வி முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.
இந்தச் சிறப்பான பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் கல்வித்துறை சார்ந்த பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். காரைதீவு கல்விக் கோட்டத்தின் இந்தத் தொடர்ச்சியான முன்னேற்றம், பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.




