இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கல்வி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவின் முதன்மைச் செயலாளர் சந்தீப் சௌத்ரி (Sandeep Chaudhary), தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில், பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் கலாநிதி யூ.எல். செய்னுடீன் மற்றும் உதவிப் பதிவாளர் எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர் மற்றும் கல்வியாளர் பரிமாற்றத் திட்டங்கள், புலமைப்பரிசில் வாய்ப்புகள், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள், உயர்கல்வி ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களுடனான தொடர்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக சந்தீப் சௌத்ரி தெரிவித்தார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு நிறுவனங்களுக்கிடையிலான கூட்டாண்மைகள் முக்கிய பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய உயர்கல்வி நிறுவனங்களுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை விரிவுபடுத்த தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாக பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தெரிவித்தார்.
சந்திப்பின் நிறைவில் இருதரப்பினரும் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக் கொண்டனர்.




