TGTE’s Tamil Olympics – News

Date:

தமிழ் ஒலிம்பிக் 2027 திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவாக 11வது ஆண்டு கோடைகால விளையாட்டு விழா, 02.08.2016 ஞாயிற்றுக்கிழமை Sutton பகுதியில் அமைந்துள்ள St Helier Open Space மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விளையாட்டு விழாவில் கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் ஆண், பெண் இருபாலருக்குமான பாரம்பரிய விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. இதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வயதுப் பிரிவினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

இவ்விளையாட்டு விழாவின் முக்கிய நிகழ்வாக, “விளையாட்டால் ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில், எல்லைகள் கடந்து உலகத் தமிழர்களை விளையாட்டின் ஊடாக ஒருங்கிணைக்கும் மாபெரும் முயற்சியான தமிழ் ஒலிம்பிக் 2027 திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும் நடைபெற்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. நீதிராஜா அவர்களால் தமிழ் ஒலிம்பிக் 2027 திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழ் சமூகத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் திரு. உதயணன், திரு. பாக்கியராஜா, திரு. எட்வின் மற்றும் திரு. ஜோய் ஆகியோரால் தமிழ் ஒலிம்பிக்கின் பொதுத் தீபம் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. நீதிராஜா அவர்களால் தமிழ் ஒலிம்பிக் சுடர் விளையாட்டு வீரர்களிடம் கையளிக்கப்பட்டது. வீரர்கள் அந்தச் சுடரை ஏந்தியவாறு மைதானத்தைச் சுற்றி வலம் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மதிப்பிற்குரிய திரு. விசுவநாதன் உருத்திரகுமார் அவர்களின் தமிழ் ஒலிம்பிக் தொடர்பான சிறப்புரை இடம்பெற்றது.

தமிழ் ஒலிம்பிக் 2027 நிகழ்ச்சித் திட்டத்தில் உலகத் தமிழர்களின் பங்கேற்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தமிழ் ஒலிம்பிக்கிற்கான உத்தியோகபூர்வ இலச்சினையை வடிவமைக்கும் போட்டிக்கான அறைகூவலையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.

தமிழர் அடையாளம், பண்பாடு, விளையாட்டு உணர்வு மற்றும் உலகத் தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தக்கூடிய தனித்துவமான இலச்சினையை உருவாக்குவதில் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பங்கேற்பை இப்போட்டி ஊக்குவிக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ் தேசிய இனத்தின் மக்களை எல்லைகள் கடந்து விளையாட்டின் ஊடாக ஒன்றிணைத்து, தமிழர்களின் தேசிய அடையாளம், ஒற்றுமை, பண்பாடு மற்றும் இளைய தலைமுறையின் விளையாட்டுத் திறன்களை உலக அரங்கில் முன்னிறுத்தும் ஒரு பெரும் முயற்சியாக தமிழ் ஒலிம்பிக் 2027 முன்னெடுக்கப்படுகிறது.

தமிழீழ மக்களின் அடையாளத்தையும் அவர்களின் இறைமை வேட்கையையும் உலக அரங்கில் எடுத்துரைக்கும் இந்த மாபெரும் முயற்சியை முன்னெடுக்கும் பொறுப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்றுள்ளது.

“விளையாட்டால் ஒன்றிணைவோம்” என்ற இலட்சியத்துடன் முன்னெடுக்கப்படும் தமிழ் ஒலிம்பிக் 2027 வெற்றிகரமாக அமைய, உலகெங்கும் வாழும் தமிழ் தேசிய இனத்தின் மக்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைய தலைமுறையினர், சமூக அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரினதும் பேராதரவையும் பங்கேற்பையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கிறது.

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்