மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் சுட்டுக் கொலை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சிஐடியினர் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஐடியினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த 2025 ஏப்ரல் 7ம் திகதி சிஐடி யினர் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து சிஜடி யினர் தொடர் விசாரணையில் பிள்ளையானின் வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடத்தப்பட்டதாக கூறப்படும் 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பான இரகசிய தகவல்களை தெரிய வந்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளின் படி ,மட்டக்களப்பு பிராந்தியத்தை மையமாகக் கொண்டு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது இதில் 2006 ம் ஆண்டு கல்லடி பிரதேசத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை, பிள்ளையான் குழுவினரால் கப்பம் கோரப்பட்ட பணத்தை வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை. அவருடைய கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிள்ளையானின் சொந்தக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்படமை, கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பில் வைத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் அப்போதைய உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற கொலைகள் தொடர்பில் பிள்ளையான் மீதும் அந்த கொலைகள் மீது தொடர்புடைய இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளாக செயற்பட்டு வந்த காத்தான்குடியை சேர்ந்த முகமட் சிபான், மற்றும் முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஜடி கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பில் வைத்திருந்த பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இருவர் உட்பட 3 பேர் மீது வழக்கு தாக்கல் செய்த விவரங்கள் அடங்கிய விசேட அறிக்கை இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்து பிள்ளையான் தவிர்ந்த ஏனைய இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வந்து நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவானிடம் சிஜடி யினர் பிள்ளையானின் பாதுகாப்பு காரணமாக அவரை அழைத்து வர முடியாத காரணத்தை நீதவானுக்கு தெரிவித்ததுடன் இதனுடன் தொடர்புபட்ட ஒருவார் இறந்துள்ளதாகவும் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அறிவித்தனர் இதனையடுத்து பிள்ளையாணை சூம் இணையவழி ஊடாக விசாரணை மேற்கொண்ட நீதவான் 3 வரையும் எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை பிள்ளையான் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக இந்த வழக்கு தொடர்பான விபரங்கள் ஏற்கனவே கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
இதேவேளை பிள்ளையானின் மிக நெருங்கிய தோழரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ரி.ம்.வி.பி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான இனியபாரதி என அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் என்பவருக்கு எதிராக 7 மனிதக் கொலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனியபாரதி தனக்கு எதிரான குற்றவியல் வழக்குகளின் சான்றுகளை அழிப்பதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு அக்கரைப்பற்று நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்திற்கு தீ வைத்த சம்பவத்திலும் பிள்ளையான் மற்றும் அவரது குழுவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறி இனியபாரதி கைது செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது
பிள்ளையானை நீதிமன்றத்துக்கு அழைத்துவருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிமன்ற பகுதியை சுற்றி விசேட அதிரடிப்படையினர் பொலிசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் நீதின்ற பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் பலத்த சோதனையின் பின்னர் பொலிசார் அனுமதித்ததை காணக்கூடியதாக இருந்தது.
-கனகராசா சரவணன்-




