‘South Asia Gateway’ ஆக இலங்கையை அறிமுகப்படுத்திய போர்ட் சிட்டி கொழும்பு

0
4

துபாயில் முதலீட்டாளர்களை கவரும் இலங்கை: தெற்காசியாவின் நுழைவாயிலாக போர்ட் சிட்டி கொழும்பு முன்னிறுத்தல்

இலங்கைக்கு வளைகுடா நாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், துபாயில் உயர்மட்ட முதலீட்டு மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.

“Globalisation and the Sri Lankan Opportunity – From Recovery to Relevance” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 200க்கும் மேற்பட்ட வணிக மற்றும் தூதரகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாடு இலங்கைத் தூதரகம், கொழும்பு போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழு மற்றும் CHEC Port City Colombo ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நடைபெற்றது.

Sobha Realty, Oracle, Emirates Airlines, First Abu Dhabi Bank உள்ளிட்ட முன்னணி ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் அருஷா கூரே, இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால பொருளாதார உறவுகளை வலியுறுத்தியதுடன், தெற்காசியாவில் விரிவடைய விரும்பும் நிறுவனங்களுக்கு இலங்கை ஒரு சிறந்த தளமாக இருப்பதாக தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டிற்கான ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஹனீப் யூசுப், இலங்கையை மீட்சிப் பயணமாக அல்லாது மாற்றத்திற்கான வெற்றிக்கதையாக பார்க்க வேண்டும் எனக் கூறினார். மேலும், போர்ட் சிட்டி கொழும்பு தெற்காசிய சந்தைகளை அடைய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு தயாரான வணிகத் தளமாக இருப்பதாக விளக்கினார்.

நிகழ்வின் போது, வளைகுடா நாடுகள் மற்றும் தெற்காசியாவுக்கிடையிலான பொருளாதார உறவுகள் குறித்து கலந்துரையாடலும் இடம்பெற்றது. மேலும், வளைகுடா பிராந்திய முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், முஜ்தபா ஷைகானி CHEC Port City Colombo-வின் GCC மற்றும் பாகிஸ்தான் பிராந்திய மூலோபாயப் பங்குதாரராக நியமிக்கப்பட்டார்.

இந்த மாநாடு, வளைகுடா முதலீட்டாளர்களுடனான இலங்கையின் உறவை மேலும் வலுப்படுத்தியதுடன், போர்ட் சிட்டி கொழும்பை தெற்காசியாவின் முக்கிய முதலீட்டு மற்றும் வணிக மையமாக முன்னிறுத்திய முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.