ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்பு: மேற்பார்வைக் குழு நியமனம்

0
21

கொழும்பு, ஜூன் 12 – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை நிதி ரீதியாக நிலைத்தன்மை கொண்டதும், வர்த்தக ரீதியாக அதிக செயல்திறன் மிக்கதுமான தேசிய விமான சேவையாக மாற்றும் நோக்கில் அதன் மூலோபாய மறுஆய்வு மற்றும் மறுசீரமைப்பை முன்னெடுக்க உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மூத்த ஆலோசகர் டாக்டர் ஹான்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவில் ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி மற்றும் நிறுவன மூலோபாய நிபுணர் தேஷல் டி மெல், முதலீட்டு வங்கி மற்றும் இணைப்பு-கையகப்படுத்தல் நிபுணர் துமித் பெர்னாண்டோ உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.

மேலும் நிதி அமைச்சின் செயலாளர் அல்லது அவரது பிரதிநிதி, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அல்லது சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பிரதிநிதி மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் ஆகியோரும் குழுவில் இடம்பெறுவர்.

நிறுவனச் சட்டம், விமானப் போக்குவரத்து சட்டம் மற்றும் பொது சட்டம் தொடர்பான நிபுணர்களும், விமானத் துறை வல்லுநர்களும் குழுவில் இணைக்கப்படவுள்ளனர்.

தேசிய விமான சேவையின் தற்போதைய நிலையை விரிவாக மதிப்பாய்வு செய்து, அரசுக்கு நீண்டகால நிதிச் சுமையை குறைப்பதோடு, நிறுவனத்தின் வணிகத் திறனை உறுதிப்படுத்தும் வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச நிதிக் கழகத்தின் (IFC) ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளன. IFC இந்த செயல்முறையின் பரிவர்த்தனை ஆலோசகராக செயல்படுகிறது.

குழுவின் முக்கிய பொறுப்புகளில், நிறுவனத்தின் எதிர்கால திசையை மதிப்பீடு செய்தல், மறுசீரமைப்பு மாதிரிகளை பரிந்துரைத்தல், பல்வேறு விருப்பங்களை ஆய்வு செய்தல் மற்றும் அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப சிறந்த தீர்வை அடையாளம் காணுதல் ஆகியவை அடங்குகின்றன.

மேலும், தேர்ந்தெடுக்கப்படும் மறுசீரமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்திலும் குழு மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும்.

மறுசீரமைப்பு மற்றும் மறுஆய்வு செயல்முறை நிறைவடையும் வரை இந்தக் குழு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.