இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமார் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கனடாவின் பிராம்ப்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் கவலை தெரிவித்துள்ளார்.
‘X’ தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், பிராம்ப்டன் மேயர் இந்த நடவடிக்கையை “பேச்சுரிமையின் அப்பட்டமான மீறல்” என்று வர்ணித்துள்ளார். மேலும், ஒரு கலைஞர் தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கும் இசையைப் பகிர்வதற்கும் அவரைக் குற்றவாளியாக்குவது ஜனநாயக விழுமியங்களைச் சீர்குலைக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதாக மீண்டும் மீண்டும் உறுதியளித்த போதிலும், எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்காக அதனை ஒரு ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக பிரவுன் குறிப்பிட்டார்.
“2009-ல் தமிழ் இனப்படுகொலை உச்சக்கட்டத்தை அடைந்ததிலிருந்து, தமிழர்கள் இன்னும் கடுமையான இராணுவக் கண்காணிப்பு மற்றும் அமைப்புரீதியான ஒடுக்குமுறையின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்,” என்று கூறிய அவர், பிராம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் போன்ற நினைவுத் திட்டங்களின் முக்கியத்துவத்தை இந்தக் கைது நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் கூறினார்.
பாடகரை உடனடியாக விடுதலை செய்ய அவர் அழைப்பு விடுத்ததோடு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (PTA) முழுமையாக ஒழிக்கக் கோரும் உலகளாவிய மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்தார்.




