வேலை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் கைது!

Date:

வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் 2 பேரை, ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (29). இவர், தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவரும், இவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகியான ஜெயபால் (27) என்பவரும், ஏரல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறினர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன், ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, பாலசுப்பிரமணியனை கட்சியில் இருந்து நீக்கி, தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது.

தலைவர்கள் கண்டனம்

இச்சம்பவம் தொடர்பாக கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஸ்ரீவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள சூழலில், திமுக மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து பொறுப்புடன் முதல்வர் செயல்படப் போவது எப்போது?’’ என கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை தவெக நிர்வாகிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கும், 6 மாதம் கழித்துதான் நாங்கள் கேள்வி கேட்க வேண்டுமா முதல்வரே? இதுதான் உங்கள் ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு செயல்படுகின்ற லட்சணமா? ‘பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவோம்’ என்று வாய்ச்சவடால் விட்டு ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?’ என தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘‘பெண்கள் பாதுகாப்பு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? குற்றவாளிகள் இருவர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதை பதைக்கச் செய்கிறது. லஞ்சம் கேட்பது, மாமூல் கேட்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினர் தற்போது பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய், பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை விடுத்து, தான் வகிக்கும் பதவியின் பொறுப்பை உணர்ந்து, தனது சொந்தக் கட்சியினரிடம் இருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

துப்பாக்கிச்சூட்டு முயற்சி தோல்வி

மவுண்ட் லவினியா காவல் பிரிவின் டெம்பிள் ரோட் பகுதியில் உள்ள ஒரு...

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும்...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94வது இடத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்