மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி – மம்தா கட்சிக்கு வீழ்ச்சி!

Date:

மேற்கு வங்க வரலாற்றில் முதல்முறையாக பாஜக ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் சுமார் 200 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் பாஜக இருப்பதால், அக்கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், 92.47% வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டத்தில் நடைபெற்ற ஃபால்டா தொகுதியில் நடைபெற்ற முறைகேடு காரணமாக அங்கு வரும் 21-ம் தேதி மறு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால், இன்று 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 148 தொகுதிகளில் வெற்றிபெறக்கூடிய கட்சி ஆட்சி அமைக்கும் எனும் நிலையில், பாஜக சுமார் 200 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் இருப்பதால் அக்கட்சியின் ஆட்சி அம்மாநிலத்தில் உறுதியாகி இருக்கிறது. 80+ தொகுதிகளை கைப்பற்ற உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அமர உள்ளது.

மேற்கு வங்கத்தை இதற்கு முன் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெற்றி பெறக்கூடிய நிலையில் உள்ளன.

சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கு வங்கத்தை 17 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெறும் நிலையில் உள்ளது. இதேபோல், 33 ஆண்டுகள் ஆட்சி செய்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெறும் நிலையில் உள்ளது.

அதேநேரத்தில், பாஜக 45 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளையும் பெறக்கூடிய நிலையில் உள்ளன.

இதன்மூலம், மேற்கு வங்க களம் பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான போட்டியாக மட்டுமே இருந்துள்ளது. இதில், மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. மோதல் அரசியலுக்குப் பெயர் பெற்ற மம்தா பானர்ஜிக்கு, அவரது பாணியில் கடும் போட்டியை கொடுத்தவர் பாஜகவின் சுவேந்து அதிகாரி.

1995 முதல் அரசியலில் இருக்கும் சுவேந்து அதிகாரி 2000 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். பின்னர், 2000 முதல் 2020 வரை மம்தாவின் தலைமையின் அவரது கட்சியில் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது கவுன்சிலராக தேர்வான சுவேந்து அதிகாரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வந்த பிறகு சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

2020ம் ஆண்டு பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜிக்கு எதிரான அரசியலை முழு வீச்சில் மேற்கொண்டார். 2021 தேர்தலில் பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, அவரை தோற்கடித்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். இதன்மூலம், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாஜக அவருக்கு வழங்கியது. நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்ததை அடுத்து, பபானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.

இம்முறையும் மம்தா பானர்ஜி பபானிபூர் தொகுதியில் போட்டியிட, நந்திகிராம் மற்றும் பபானிபூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வரும் நிலையில், நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி முன்னிலை வகித்து வருகிறார்.

அறுதிப் பெரும்பான்மையில் பாஜக வெற்றி பெற இருப்பதால், சுவேந்து அதிகாரி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எவரது பெயரையும் பாஜக அறிவிக்கவில்லை. இதனால், பாஜக மூத்த தலைவரான திலீப் கோஷ், மூத்த பெண் தலைவரான அக்னிமித்ரா பால், பாஜகவின் மாநில தலைவரான ஷமிக் பட்டாச்சார்யா ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட மொட்டு உறுப்பினர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் ஒருவர்,...

பொலிசாரால் தேடப்படும் பெண்மணி

ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாகத்...

ஹோர்முஸ் ஜலசந்தியில் எமது கப்பல் தாக்கப்படவில்லை: அமெரிக்கா

ஒரு அமெரிக்கப் போர்க்கப்பலைத் திரும்பிச் செல்லும்படி கட்டாயப்படுத்தியதாக ஈரான் கூறியதைத் தொடர்ந்து,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்