மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கடற் படை அதிகாரியை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்த களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவான், இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்து குற்றவியல் கோவை 1994 ம் ஆண்டு 22 கீழ் முதலாம் பிரிவு சித்திரவதை தடுப்பு தண்டணைச் சட்டத்தின் கீழ் சாட்சிகள் மற்றும் சான்று பொருட்களுடன் எதிர்வரும் 22ம் திகதி வழக்கு தாக்குல் செய்யுமாறு பொலிசாருக்கு புதன்கிழமை (22) உத்தரவிட்டது.
கடந்த 5ம் திகதி செட்டிபாளையம் கடற்கரையில் கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் மீன்பிடி தொழில் ஈடுபட்டுவந்த நந்தீசன் என்பவரை சுருக்கு வலை பாவித்து மீன்பிடித்தார் என குற்றம்சாட்டியும், ஈயம் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டு கைது செய்து அங்கு 2 மணித்தியாலம் முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்துள்ளதாக பரிக்கப்பட்ட மீனவர் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 8ம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து பொலிசார் குறித்த கடற்படை அதிகாரியை புதன்கிழமை கைது செய்து களுவாஞ்சிக்குடி நீதாவான் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு நீதவான் எடுத்துக் கொண்டபோது வழக்காளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் கோவை 314 கீழ் பொலிசார் வழக்கு தாக்கல் செய்தது பிழையானது, வழக்காளியை முழங்காலில் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளார். அது குற்றவியல் கோவை 1994 ம் ஆண்டு 22 கீழ் முதலாம் பிரிவு சித்திரவதை தடுப்பு தண்டணைச் சட்டத்தின்கீழ் வழக்கு தாக்குதல் செய்ய வேண்டியதை பொலிசார் எதிராளிக்கு சாதகமாக 314 கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என்பதுடன் பொலிசார் நேரடியாக சாட்சிகளின் முறப்பாட்டை பதிவு செய்திருந்த போதும் அதனை இங்கு சமர்ப்பிக்காது பொலிசார் செயற்பட்டுள்ளனர் என சட்டத்தரணி வாதங்களை முன்வைத்தார்.
இதனை தொடர்ந்து நீதவான், பொலிசார் 314 கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கின் பிரகாரம் கடற்படை அதிகாரியை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிப்பதுடன் பொலிசார் மீண்டும் விசாரணை செய்து குற்றவியல் கோவை 1994 ம் ஆண்டு 22 கீழ் முதலாம் பிரிவின் கீழ் சாட்சிகள் மற்றும் சான்று பொருட்களுடன் எதிர்வரும் 22 ம் திகதி கடற்படை அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்.
-கனகராஜா சரவணன்-



