மட்டு தொல்பொருள் பெயர்பலகை அகற்றம்: கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் உட்பட ஐவருக்கும் பிணை

Date:

வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உட்பட 5 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தவிசாளர், பிரதி தவிசாளர் உள்ளிட்ட நால்வர் இன்று (25) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (24) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஐவரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 22ஆம் திகதி கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் “தொல்பொருள் இடம்” என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பெயர்ப் பலகைகள் நிறுவப்பட்டிருந்தன.

எனினும், பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் தமது அதிகார எல்லைக்குட்பட்ட வீதிகளில் இப் பலகைகள் வைக்கப்பட்டதாகக் கூறி, பிரதேச சபைத் தவிசாளர் உத்தரவின் பேரில் அவை அகற்றப்பட்டன.

இதனால் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று அகற்றப்பட்ட பெயர்ப் பலகைகளை பொலிஸார் மீட்டதுடன், ஒருவரை கைது செய்திருந்தனர்.

தவிசாளர், பிரதி தவிசாளர் உட்பட மேலும் நால்வரைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று நீதிமன்றில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கில் பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உள்ளிட்ட ஐந்து பேருக்காக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகினார்.

பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட ‘பெயர்ப் பலகை திருட்டு’ மற்றும் ‘அரச உத்தியோகத்தரால் நிறுவப்பட்ட பலகையை அகற்றியமை குற்றம்’ போன்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை என சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம், பொதுவீதிகள் தொடர்பான முழு அதிகாரமும் பிரதேச சபைக்கே உரியது எனவும், அந்த அதிகாரத்தின் கீழ் தவிசாளர் செயற்பட்டுள்ளதால், அது எவ்விதத்திலும் குற்றமாகக் கருத முடியாது எனவும் அவர் வாதிட்டார்.

மேலும், உள்ளூராட்சி மன்றத்தின் முறையான அனுமதியின்றி எந்தப் பலகையையும் நிறுவ முடியாது என்பதை நீதிமன்றில் எடுத்துக்கூறியபோது, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொண்டனர்.

எதிர்காலத்தில் முறையான அனுமதி பெற்று பலகைகளை நிறுவுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

இதனடிப்படையில், குற்றச்சாட்டுகள் பிணை வழங்கத்தக்கவை என்பதாலும், பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க முடியும் என்பதாலும் ஐந்து சந்தேக நபர்களையும் தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

பிரதேச சபையின் முறைப்படி அனுமதி பெற்று டிசம்பர் 15ஆம் திகதிக்குள் பெயர்ப் பலகைகள் நிறுவப்பட்டு, இப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்பட்டால், அன்றைய தினமே வழக்கு முடிவுக்கு வரும் என சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.

வழக்கு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்