போதை – எச்சரிக்கை – கூட்டு நடவடிக்கை

Date:

கருணாகரன்

ஒரு காலம் ஆயுதங்களுடன் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அல்லது ஆயுதந்தாங்கிய விடுதலை இயக்கங்களுடன் தொடர்புடையோர் என்று கைது செய்யப்பட்டனர். அப்படிக் கைது செய்யப்பட்டவர்களுக்கு சமூகத்தில் பெரும் மதிப்பு ஏற்பட்டது. அவர்கள் ‘விடுதலைப் போராளிகள்’ என்ற அடிப்படையில் அந்த மதிப்பு வழங்கப்பட்டது.

அதற்கு முன் விடுதலை அரசியலைப் பேசியவர்களும் அரச பயங்கரவாதத்துக்கு எதிராகப் பேசியவர்களும் எனப் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய கைதுகளும் சமூகத்தில் எழுச்சியையும் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான கோபத்தையும் உண்டாக்கியது.

அப்படிக் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர்களை விடுதலை செய்வதற்காக புகழ்மிக்க சட்டவாளர்கள் எல்லாம் முன்னிலையாகினார்கள். பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமலே அவர்களுடைய வழக்குகளைப் பேசினார்கள். அதைச் செய்வது தங்களுடைய கடமை என்று கருதினர்.

கைதானவர்கள் விடுதலையாகியபோது மக்கள் திரண்டு, அந்தக் கைதிகளை வரவேற்றனர். விடுதலையாகாமலே சிறைகளில் கொல்லப்பட்டோரும் உண்டு. அப்படிக் கொல்லப்பட்டவர்களுக்கு இப்போதும் மதிப்பும் சிறப்பு அஞ்சலியும் இப்போதும் உண்டு.

இதெல்லாம் ஒரு காலத்தின் நிஜம். வரலாறு.

இப்போதும் பெருமளவு இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த இரவில் (03.11.2025) யாழ்ப்பாணத்தில் ஐந்து இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது என்றொரு செய்தி வந்திருக்கிறது. இன்னொரு செய்தி, போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இரண்டு இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் கைது செய்திருக்கிறது.

தினமும் இப்படியான கவலைக்குரிய, வெட்கத்துக்குரிய செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. தினமும் கைதுகள் நடக்கின்றன. இந்தக் கைதுகளில் பெருமளவுக்கும் இளைஞர்களே உள்ளனர். சில இடங்களில் பாடசாலை மாணவர்களும் சிக்கியுள்ளனர்.

அன்றைய தலைமுறை இளையோருக்கும் அவர்களுடைய சமூக, அரசியல் விடுதலை உணர்வுக்கும் இன்றைய தலைமுறையினர்களுடைய சமூக – அரசியல் உணர்வுக்கும் இடையிலான வேறுபாடு எப்படி உள்ளதென வாசகர்களாகிய நீங்கள் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

நாம் எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறோம் என்பது தெரியும். போதைப் பொருள் பாவனை – விற்பனை போன்றவற்றில் மட்டுமல்ல, சமூக அக்கறை, சமூகச் செயற்பாடு போன்றவற்றிலும் பெருந்தேக்கமே ஏற்பட்டுள்ளது. ஒரு சிறிய தரப்பினர் மட்டுமே பொதுப் பணிகளில் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றனர். ஏனையோர் சமூகத்தைப் பிழிந்து, சுரண்டி, ஏமாற்றி, அழித்தே வாழ்கின்றனர். இதில் படித்தோரும் உள்ளடக்கம். அதைப்பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

இப்போது, இந்தப் போதைப் பொருள் பாவனையிலும் கடத்தலிலும் சம்மந்தப்பட்டிருப்போரையிட்டு பெற்றோருக்கு ஆழ்ந்த கவலை ஏற்பட்டுள்ளது. இளையோரே அதிகளவில் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுவதால், பெற்றோருக்கு கவலை உண்டாகுவது நியாயமே.

பொதுவாகவே போதைப் பொருள் விவகாரத்தினால் சமூகமே கலங்கிப் போய் உள்ளது. சமூகத்தைப் பெருந்துக்கம் ஆட்கொண்டுள்ளது.

சில ஆண்டுகள் வரையில் போதைப்பொருள் விநியோகத்தோடு படைப் புலனாய்வுத் தரப்பினரைத் தமிழ் அரசியல்வாதிகள் நேரடியாகவே குற்றம் சாட்டி வந்தனர். இளைய தலைமுறையிடம் விடுதலை உணர்வை மழுங்கடித்துத் தமிழ் சமூகத்தைப் பலவீனப்படுத்துவதற்கு அரசு படைப்புலனாய்வுத்துறையைப் பயன்படுத்துகிறது என்று சொல்லப்பட்டது.

ஆனால், போதைப்பொருள் பாவனையும் அதனுடைய விநியோகப் பரப்பும் நாடு முழுவதிலும் உள்ளது.

போதைப்பொருட்கள் பொதி பொதியாக கடலிலும் வீடுகளிலும் வழிகளிலும் கைப்பற்றப்படுகின்றன. அந்தப் படங்கள் இணையங்களிலும் பிற ஊடகங்களிலும் பகிரப்படுத்தப்படுகின்றன.

வெட்ட வெட்டத் தளைக்கும் ராட்சதர்களின் தலைகளைப்போல, கைப்பற்றப்பட, கைப்பற்றப்பட தொடர்ந்தும் பொருட்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அதைப்போலக் கைது செய்யச் செய்யப் புதிது புதிதாக ஆட்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

ஆம், இதொரு தொழிலாகவே நடக்கிறது. சட்டவிரோதத் தொழிலாக.

ஆரம்பத்தில் அங்கொன்று இங்கொன்று என மிக ரகசியமாக இருந்த இந்தத் தொழில் இப்பொழுது மிகப் பகிரங்கமாக – செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறி விட்டது. அந்தந்த ஊர்களில் இந்தத் தொழிலில் ஈடுபடுவோரைப் பற்றிச் சனங்கள் பகிரங்கமாகவே கதைக்கிறார்கள். ஆனால், அதைக் கண்டிக்கவோ, அந்தத் தொழிலைச் செய்வோரைப் பற்றிப் பொலிஸ் தரப்பில் முறையிடவோ யாருக்கும் துணிச்சல் இல்லை.

ஏனென்றால், இந்தத் தொழிலின் தன்மை அப்படியானது. ‘போட்டுத் தள்ளி விடுவார்கள்’ என்ற சமூக அச்சமே இதற்குக் காரணம்.

1970, 80 களின் தொடக்கத்திலும் இந்தத் தொழில் அல்லது கள்ளக் கடத்தல் – போதைப் பொருள் பாவனை – இருந்ததுதான். ஆனால், அது இந்த அளவுக்கு பெருத்திருக்கவில்லை.

என்றபோதும் இது சமூகத்துப் பெருங்கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்த அன்றைய விடுதலை இயக்கங்கள், இந்தத் தொழிலில் – இந்தப் பாவனையில் – ஈடுபட்டோர்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அது சரியென இங்கே விவாதிக்கவில்லை. ஆனால், அவ்வாறு ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டே அது அன்று கட்டுப்படுத்தப்பட்டது.

இப்பொழுது அதற்கு நிகரான முறையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கூடவே இதனோடு தொடர்புபட்ட பாதாள உலகக் குழுவின் மீதும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏனெனில் இதற்குப் பின்னால் மிகப் பெரியதொரு வலையமைப்பு உள்ளது என்றே தெரிகிறது. இல்லையெனில் இப்படித் தொடர்ச்சியாக இது நிகழ வாய்ப்பில்லை. ஒவ்வொரு இடங்களிலும் பெருமளவு பொருள்கள் பிடிக்கப்பட்டுக் கைப்பற்றப்படுகின்றன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுத் தண்டனை விதிக்கப்படுகிறார்கள். அவை பகிரங்கப்படுத்தப்படுகின்றன. இதற்குப் பிறகும் அவை குறையாமல் தொடர்ந்தும் கடத்தப்படுகின்றன என்றால், அது லேசுப்பட்ட விடயமல்ல.

அநேகமாக பெரும்பாலான கடத்தல்களும் இந்தியாவின் வழியாகவே இலங்கைக்குள் வருகின்றன. சில பொருட்கள் வேறு நாடுகளிலிருந்து விமான நிலையங்களின் ஊடாகவும் வருகின்றன. அவற்றை மடக்கி அதிகாரிகள் கைப்பற்றியிருக்கிறார்கள்.

ஒரு காலம் – முந்திய ஆட்சிகளின்போது – துறைமுகங்களின் வழியாக இவை வந்ததாகவும் கூறப்படுகிறது. துறைமுகத்தில் சுங்க அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தலின் பிரகாரம், குறித்த கொள்கலன்கள் பரிசோதனை செய்யப்படாமல், அரசியல் தலையீட்டினால் – செல்வாக்கினால் – வெளியேற்றப்பட்டன என்று கூறுகின்றன அந்தத் தகவல்கள்.

இதைக் குறித்த விசாரணைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

வடக்குக் கிழக்கில் உள்ளதையும் விட கொழும்பில்தான் போதைப் பொருள் விவகாரமும் அதனோடிணைந்த மாஃபியாக்களும் (பாதாள உலகக் குழுக்களும்) அதிகமாக உள்ளன. இதற்கு ஆதரவாகவும் இதனோடு தொடர்பு பட்டதாகவும் கருதப்படுவோரின் மீது அதிரடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான விசேட செயற்றிட்டமொன்றை இன்றைய ஆட்சித் தரப்பு முன்னெடுத்து வருகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி ஜெயசூரிய உட்பட சமூக, மதத் தலைவர்கள், இதற்கான நடவடிக்கைப் பிரிவினர் என அனைவரும் இணைந்த ஒரு நிகழ்ச்சி அண்மையில் கொழும்பில் நடந்துள்ளது.

போதைப்பொருளை ஒழிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவருடைய பங்களிப்பும் அவசியம் என்பதை உணர்த்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

அது உண்மையும் கூட. Clean Sri lanka என்று சொல்வது முக்கியமானதல்ல. அதை நடைமுறையாக்கம் செய்வதே வெற்றியும் சிறப்புமாகும். அரசாங்கம் இதை நடைமுறையாக்க விளைவதாகவே தோன்றுகிறது. அப்படி நடக்குமானால் அதை நாம் பாராட்டியே தீர வேண்டும்.

இளைய தலைமுறையின் சிந்தனைச் சக்தியும் உழைப்புச் சக்தியுமே ஒரு நாட்டின் எதிர்காலமும் வளர்ச்சியுமாகும். ஆகவே இளைய தலைமுறையைப் பாதுகாக்க வேண்டும். அப்படியானால், அவர்களைப் பாதிக்கும் – பாழ்படுத்தும் விடயங்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை – பொறுப்பு.

இதெல்லாம் இருக்கட்டும். அன்று செய்யப்பட்டவர்களுக்கும் இப்போது கைது செய்யப்பட்டவர்களுக்குமிடையிலான சமூகப் பெறுமானம் என்ன? சமூகப் பார்வை என்ன? வரலாற்றுப் பார்வை என்ன?

அன்று கைது செய்யப்பட்டவர்கள், விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணிப்போராக இருந்தனர். தங்களுடைய மக்களைப் பற்றி, தமது சமூகம் பற்றிய உயர் விழுமியங்களைக் கொண்டவர்களாக இருந்தனர்.

இப்பொழுது கைது செய்யப்படுவோர் சமூக விரோதிகளாக, தங்களுடைய குடும்பத்திற்கே எதிராளிகளாக, ஏன் தமக்கே எதிரானவர்களாக இருக்கின்றனர்.

போதைப் பொருள் விற்பனையில் சமூகத்தை அழிக்கின்றனர். போதைப் பொருள் பாவனையில் தம்மையே அழிக்கின்றனர்.

இது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, வடக்குக் கிழக்கில் மட்டுமல்ல, தென்னிலங்கையிலும் ஏராளம் கைதுகள். ஏராளம் போதைப்பொருள் மீட்புகள் எனத் தொடருகின்றன.

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் – அதாவது கடந்த 10 மாதத்திற்குள் 40, 000 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான (போதைப்பொருட்களுக்கான பெறுமதியை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பது கேள்வியே!) போதைப்பொருட்களை தாம் மீட்டுள்ளதாக கடற்படை சொல்கிறது. இது கடல்வழியாக கடத்திக் கொண்டு வரும்போது மீட்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.

அப்படியென்றால், இதையும் விட அதிகமாகவே காவல்துறையினர் மீட்ட போதைப்பொருட்கள் இருக்க வேண்டும். கடற்படையும் காவல்துறையும் கூட்டாகவும் தனித்தும் செயற்பட்டால்தான் இந்தச் சீரழிவுக் கலாச்சாரத்தை – மிகக் கொடுமையான நோயை நீக்கலாம். அதற்கு மக்களுடைய – ஏனைய அரசியற் தரப்பினருடைய பங்களிப்புகளும் இணைந்திருப்பது அவசியம்.

ஆனால், இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளில் பலர் போதைப்பொருள் மற்றும் மதுச் சாலை வாணிபம் போன்றவற்றோடு தொடர்பு பட்டவர்கள். அவர்களே இதில் முகவர்களாகவும் தொழில் அதிபர்களாகவும் உள்ளனர்.

அப்படியிருக்கும்போது எப்படி அவர்கள் இதற்கு ஒத்துழைப்பைத் தருவார்கள் என்று உங்களுடைய ரகசியக் குரல் (Mind Voice) கேட்கிறது.

காலம் எல்லாவற்றையும் மாற்றும், எல்லோரையும் மாற்றும். அந்தக் காலம் மலர்ந்துள்ளது. ஆகவே அதனோடு இணைந்து மக்களும் இந்தப் போதைக் கலாச்சாரத்தை – போதை யுகத்தை மாற்ற வேண்டும்.

இல்லையெனில் நாடே போதை மயக்கத்தில் ஆழ்ந்து அழிந்து விடும். என்பதால் இதொரு கூட்டுப் பொறுப்பு என்று உணர்ந்து செயற்படுவோம்.

ஆம், எங்கள் வீடுகளை நாம் பாதுகாப்போம். எங்கள் பிள்ளைகளை, எங்கள் சமூகத்தை, எங்கள் இனத்தை, எங்கள் தேசத்தை…

00

spot_imgspot_img

More like this
Related

Uudet verovapaat nettikasinot Suomessa.1616

Uudet verovapaat nettikasinot Suomessa ...

Kometa онлайн казино в России регистрация и вход.5111

Kometa онлайн казино в России - регистрация и вход ...

казино онлайн 2025 где получить самые крупные выигрыши.4062

Эксклюзивный рейтинг казино онлайн 2025 - где получить самые...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்