முல்லைத்தீவு, முத்துஐயன் கட்டு குளத்தின் இடதுகரை பகுதியில் அமைந்திருந்த இலங்கை இராணுவத்தின் சிங்கப்படையணியின் 12வது பற்றாலியன் முகாமுக்குள் நுழைந்து திருடிய இளைஞர் குழுவொன்று, இராணுவத்தினரால் தாக்கப்பட்ட போது, தப்பியோடியது. அவர்களில் ஒரு இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருந்தார்.
அவர் இராணுவத்தினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக தவறாக குறிப்பிட்டு, இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
எனினும், இந்த போராட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வடக்கு கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கதவடைப்பு இடம்பெறாது. வர்த்தக நிலையங்கள் திறக்கும். பொதுப்போக்குவரத்து தடங்களின்றி நடைபெறும். முச்சக்கர வண்டி சங்கங்கள் கதவடைப்பு அழைப்பை நிராகரித்துள்ளன. பாடசாலைகள் நடக்கும். அரச அலுவலவங்கள் வங்கிகள் இயங்கும். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் பிரமாண்ட விளையாட்டு நிகழ்வு நடந்து வருகிறது. இன்றும் அது தொடரும்.
முத்துஐயன்கட்டில் உயிரிழந்த இளைஞன், சம்பவத்தின் போது ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தார்.
அவர் இராணுவச்சிப்பாய் ஒருவருக்கு கஞ்சா, கசிப்ப கொடுத்தே திருடும் திட்டத்தை வகுத்திருந்தார்.
முகாமுக்குள் நுழைந்து திருடியவர்களில் ஒருவர் இராணுவத்திடம் சிக்கினார். ஏனையவரகள் தப்பியோடிவிட்டனர். இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர், பின்னர் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த இளைஞன் ஏற்கெனவே இந்த இராணுவ முகாமுக்குள் புகுந்து திருடியுள்ளார் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.
இந்த நபர் ஜனவரி மாதம் முகாமுக்குள் நுழைந்து பொருட்களைத் திருடியதாகவும், முல்லைத்தீவு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்னும் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்த பின்னணியில், இராணுவ முகாமுக்குள் திருடும் உரிமையை வலியுறுத்தியா கதவடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என சமூக ஊடகங்களில் பரவலாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.




