‘அன்பு அண்ணன் வைகோவுக்கு பாராட்டு; அருமை நண்பர் கமலுக்கு வாழ்த்துகள்’ – முதல்வர் ஸ்டாலின்

Date:

பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் சங்கநாதமென முழங்கிய அன்பு அண்ணன் வைகோவுக்கு பாராட்டுகள், அருமை நண்பர் கமல்ஹாசன் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் முழு விவரம் வருமாறு: நாடாளுமன்ற வரலாற்றில் மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தனக்கு கிடைத்த நீண்ட நெடிய அனுபவத்தின் வாயிலாக, தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் சங்கநாதமென முழங்கியவர்.

நேற்று (ஜூலை 24) மாநிலங்களவையில் தனக்கான பிரியாவிடை நிகழ்வில் அண்ணன் வைகோ, கலைஞரையும், கலைஞரின் மனசாட்சியான சிந்தனையாளர் முரசொலி மாறனையும் நினைவுபடுத்தி நன்றி கூறியதுடன், எனக்கும் நன்றி தெரிவித்ததை மருத்துவமனையிலிருந்து தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்தேன். திராவிட இயக்கத்தின் தூணாக நின்று, தமிழர்களின் உரிமைக்கான அவரது செயல்பாடுகள் மக்கள் மன்றத்தில் என்றும் தொடர்ந்திட வேண்டும் என அன்பு அண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன்.

கருப்பு-சிவப்பு கழகத்தில் அண்ணன் சண்முகம் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனது பணியினைச் சிறப்பாக நிறைவேற்றி, பதவிப் பொறுப்பை நிறைவு செய்திருக்கிறார். உரிமைகளை விட்டுத் தராத அவருடைய கொள்கை உணர்வும், தொழிலாளர் நலனில் அவருக்குள்ள அக்கறையும் மாநிலங்களவை விவாதங்களில் எதிரொலித்தன. நாடாளுமன்ற மாநிலங்களவையில் அண்ணன் சண்முகம் ஆற்றிய பணிகளுக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவருடைய தொழிற்சங்கப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

மூத்தோர் அவை என அழைக்கப்படும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கழகத்தின் இளங்குருத்தாக அனுப்பி வைக்கப்பட்ட தம்பி எம்.எம்.அப்துல்லா, தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து, மாநிலங்களவையில் மக்கள் சேவகராகச் சிறப்பாகப் பணியாற்றி, மாற்றுக்கட்சியினரும் பாராட்டும் வகையில் நடந்துகொண்டதை அறிந்து கழகத்தின் தலைவர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன். சமூகநீதிப் பாதையில் தன் பயணம் தொடரும் என்று அவர் மாநிலங்களவையில் குறிப்பிட்டதுபோல, மக்கள் மன்றத்தில் கழகத்தின் சார்பில் அவருக்கான பணிகள் காத்திருக்கின்றன எனக் கூறி வாழ்த்தி மகிழ்கிறேன்.

அதேபோல், சமூகநீதி காக்க அயராது பணியாற்றும் நீதிமன்றங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத்தந்து ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளைக் காத்து வரும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீண்டும் தன்னுடைய அழுத்தமான வாதங்களை வைத்து உரிமைக்குரல் எழுப்பவுள்ளார். அவருக்கும், மாநிலங்களவையில் புதிதாகப் பொறுப்பேற்று தங்களுடைய கருத்துகளைப் பதிவுசெய்யவுள்ள அருமை நண்பர் கமல்ஹாசன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கும் அவர்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்