மட்டக்களப்பு ஓட்டமாவடியில் கோயிலை இடித்து இறைச்சி கடையும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டினார் என ஹிஸ்புல்லாவை விமர்சித்த இலங்கை தமிழரசுக்கட்சி, அந்த இடங்களில் அவருடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது என விமர்சித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர்அலி.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்றை நிலையத்தில் சனிக்கிழமை (19) இடம்பெற்று ஊடக மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமீர்அலி மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அங்கு கருத்து தெரிவித்த பொது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஓட்டமாவடி கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் ஜக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் ஜக்கிய மக்கள் சக்தி சின்னத்தில் போட்டியிட்டோம்.
இதில் 8 வட்டாரங்களை நாங்கள் வென்றோம். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இரண்டு வட்டாரங்களை வென்றதுடன் 4 போனஸ் ஆசனங்கள் கிடைத்தது. அதேவேளை தேசிய மக்கள் சக்திக்கு இரண்டு ஆசனங்களும் ஜக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனமும் இலங்கை தமிழரசு கட்சிக்கு ஒரு ஆசனமும் சுயேச்சைக்குழு ஒன்றிற்கு ஒரு ஆசனம் உட்பட 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் யூன் 16ம் திகதி சபை அமர்வு இடம்பெற இருந்த நிலையில் அன்றைய தினம் எனது கட்சி காரியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது கட்சி எவ்வாறு சொல்லியுள்ளதோ அதன் அடிப்படையில் தவிசாளராக கலால்தீன், பிரதி தவிசாளராக அன்சார் தெரிவாக வேண்டுமென கட்சி எடுத்துக் கொண்ட தீர்மானத்தை அவர்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தினேன்.
இதன்போது தற்போது ஓட்டமாவடி பிரதேச சபையினுடைய தவிசாளராகியுள்ள பைரூஸ் அந்த கூட்டத்திலே தொடர்ந்து கலந்துகொண்டார். காலை 10 மணி தொடக்கம் இடம்பெற்ற அந்த கூட்டத்தை பகல் போசனத்துக்காக அதாவது சபனில் முஸ்லீம்கள் ஒரு தாம்பாளத்திலே 6 பேர் ஒன்றாக இருந்து சாப்பிடும் முறை அந்த முறையில் தற்போதைய பிரதேச சபை தவிசாளரும் இருந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் இரண்டாவது அமர்வில் தெளிவாக பேசினேன். அதில் கட்சி பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்டவரை தவிசாளராகவும் ஜக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்வது என தெரிவித்தேன்.
இதன்போது ஒட்டு மொத்தமாக 9 பேரும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன் எனது கையில் பைரூஸ் உட்பட அனைவரும் சத்தியம் செய்துவிட்டு சென்றனர். அதேநேரத்தில் தவிசாளரான பைரூஸ் சாப்பிட்டுவிட்டு கையை கழுவிவிட்டு வருகின்றேன் என ஓடோடிச் சென்று அங்கு சென்று அவர்களுக்கு உடன்பாடு தெரிவித்து கட்சி மாறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா தமிழரசுகட்சியுடன் கைகோர்த்து இந்த ஆட்சியை கைப்பற்றினர். அதில் எனக்கு வியப்பான விடயம், ஓட்டமாவடியில் கோயிலை இடித்து இறைச்சிகடை கட்டியது எனவும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டப்பட்டது என்று குற்றச்சாட்டை சுமத்தியிருந்த போதும் கூட இலங்கை தமிழரசு கட்சி அவரோடு கைகோர்த்து இந்த ஆட்சியை கைப்பற்றிய பணியை செய்திருக்கிறார்கள்.
இருந்தபோதும் அப்படியான நிலையில் அவர்கள் உள்ளாந்த ரீதியாக எங்களுடைய கட்சி உறுப்பினராக இருந்த பைரூஸை தவிசாளராக்கி பிரேரணை கொண்டுவந்து ஒரு அருவருப்பான முறையிலே சபையை வழிநடாத்தியுள்ளனர்.
எனவே எங்கள் கட்சி தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டதுடன் சத்தியத்தை மீறி கட்சியின் கட்டுக்கோப்பை மீறி கட்சி யாப்புக்கு விரோதமாக தவிசாளராக வந்திருப்பது சட்ட விரோதமானது. எனவே கட்சியின் ஒழுக்ககாற்று குழு மிகவும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதுடன் அவர் மாத்திரமல்ல நாட்டிலே எங்கள் கட்சிக்குள் சில இடங்களில் இவ்வாறு இடம்பெற்றதன் அடிப்படையில் அவர்களுக்கு எதிரா ஒழுக்ககாற்று நடவடிக்கை எடுக்கும் என்றார்.




