சில நாட்களின் முன்னர் தமிழ் பக்கத்தில் எதிர்வுகூறப்பட்டதை போலவே, ஊர்காவற்துறை பிரதேசசபை தவிசாளர் தெரிவில், இலங்கை தமிழ் அரசு கட்சி இரண்டுபட, தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட இருவரும் சம வாக்கு பெற… திருவுச்சீட்டு முறையில் தமிழ் தேசிய பேரவை ஊர்காவற்துறை பிரதேசசபையை கைப்பற்றியுள்ளது.
ஊர்காவற்துறை பிரதேசசபை தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி 4 ஆசனங்களையும், அவர்களின் உள்ளூராட்சிசபை பங்காளிகளான இலங்கை தமிழ் அரசு கட்சி 2 ஆசனங்களையும் பெற்றிருந்தன.
தமிழ் தேசிய பேரவை 3 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும், ஜேவிபி 3 ஆசனங்களையும் பெற்றிருந்தன.
எனினும், ஈ.பி.டி.பியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லையென தீவக தமிழரசு கட்சி கிளையினர் தீர்மானித்தனர். இவர்கள் சிறிதரன் அணியுடன் நெருக்கமானவர்கள். இவர்கள் ஊர்காவற்துறை தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய பேரவையை ஆதரிக்க தீர்மானித்திருந்தனர்.
எனினும், ஊர்காவற்துறை பிரதேசசபைக்கு தெரிவான 1 உறுப்பினருடன் பேசிய கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அவரை தவிசாளர் ஆக்குவதாக கூறினார். இதன்படி, அந்த வேட்பாளர் ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் தவிசாளராக போகிறேன் என குறிப்பிட்டு, தமிழ் தேசிய பேரவை வேட்பாளரை ஆதரிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார்.
இன்றைய தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய பேரவை சார்பில் அன்னலிங்கம் அன்னராசா நிறுத்தப்பட்டிருந்தார். அவருக்கு ஜனநாயக தமிழ் தேசிய பேரவையின் ஒரு உறுப்பினரும், தமிழ் அரசு கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவளித்திருந்தனர்.
அதேநேரம், மற்றொரு தமிழ் அரசு கட்சி உறுப்பினர் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை 4 ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர்.
இரு தரப்புக்கும் 5 வாக்குகள் கிடைத்ததன் அடிப்படையில் திருவுளச்சீட்டு முறையில் தமிழ் தேசிய பேரவை உறுப்பினர் வெற்றியீட்டினார்.
தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவளித்த தமிழ் அரசு கட்சி உறுப்பினர் உபதவிசாளராக நிறுத்தப்பட்டு, அவரும் வெற்றியீட்டினார்.
ஊர்காவற்துறையில் இந்த சிக்கல் வருமென முன்னரே கணித்திருந்த சுமந்திரன், உறுப்பினர்களை கடிவாளமிடும் வகையில் பத்திரிகை அறிக்கைகள் மற்றும் வலி வடக்கு உறுப்பினர் ஒருவரை இடைநீக்கும் கடிதம் அனுப்பியிருந்தும், ஊர்காவற்துறையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.




