“எங்களை வற்புறுத்தாதீர்கள். நாங்கள் உங்களுடனும் கூட்டணியாக இருக்கிறோம். அதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியுடனும் கூட்டணியாக இருக்கிறோம். எங்களை எங்கள் வழியிலேயே விட்டுவிடுங்கள்“-
இவ்வாறு எக்குத்தப்பாக பேசியுள்ளனர் ஜனநாயக போராளிகள் குழு.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களை இன்று (9) சந்தித்த ஜனநாயக போராளிகள் குழுவின் வேந்தன், துளசி ஆகியோர் இவ்வாறு குறிப்பிட்டனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியினர், பருத்தித்துறை பிரதேசசபையில் தமக்கு உபதவிசாளர் பதவி தருவதாக குறிப்பிட்டுள்ளதால், அந்த சபையில் மட்டும் இலங்கை தமிழ் அரசு கட்சியினருடன் கூட்டணி வைக்கிறோம். ஏனைய சபைகளில் உங்களுடன் கூட்டணி வைத்து, நீங்கள் ஆதரிக்கும் தரப்பினரை ஆதரிக்கிறோம் என்றும் விபரீதமாக பேசியுள்ளனர்.
ஜனநாயக போராளிகள் குழுவினர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் வலையில் விழுந்து, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் தேசிய பேரவைக்கிடையிலான உடன்படிக்கையில் டிமிக்கி விட்டதை தமிழ்பக்கம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது.
இதன் பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர், வேந்தனை அழைத்து வினவிய போது- பருத்தித்துறை பிரதேசசபையில் நாம் வெல்ல முடியாது, அங்கு தமிழரசு கட்சியினர் ஆட்சியமைத்துக் கொண்டு போகட்டும் என குறிப்பிட்டார்.
பருத்தித்துறை பிரதேசசபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் போட்டியிடாமல் இருப்பதற்காக வேந்தன் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
எனினும், பருத்தித்துறை பிரதேசசபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டதையடுத்து, இன்று வேந்தனும், துளசியும் இந்த விபரீத யோசனையை தெரிவித்தனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பலவீனமான தலைவர்களை சமாளித்து, ஜனநாயக போராளிகள் கட்சி 4 போனஸ் ஆசனங்களை பெற்றுள்ளது. எனினும், வட்டாரரீதியாக ஜனநாயக போராளிகள் நிறுத்திய ஒரேயொருவர் வெற்றியீட்டினார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணயின் பலவீனமான தலைவர்களை சமாளித்து 4 போனஸ் ஆசனங்களை பெற்ற நம்பிக்கையில், அவர்களை இம்முறையும் சமாளிக்கலாம் என கணக்குப் போட்டோ என்னவோ, இன்று ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர்களை சந்தித்து, இரண்டு தரப்புடனும் கூட்டணி வைக்கும் விபரீத யோசனையை தெரிவித்தனர்.
எனினும், இன்றைய சந்திப்பில் சமத்துவ கட்சியின் தலைவர் மு.சந்திரகுமாரும் கலந்து கொண்டிருந்ததால், ஜனநாயக போராளிகள் குழுவின் நடவடிக்கை அரசியல் அறமற்றது என நேரடியாக குறிப்பிட்டார்.
இதன்போது, சமத்துவ கட்சியின் சார்பில் பருத்தித்துறை நகரசபையில் வெற்றியீட்டியவரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க விரும்பமில்லாமல் இருக்கிறார் என ஜனநாயக போராளிகளின் வேந்தன் குறிப்பிட்டார்.
இதனால் சூடான சந்திரகுமார்- “இங்கே பாருங்கள் வேந்தன். இது ஒரு கூட்டணி. எனக்கு என்ன விரும்பம் உள்ளது, மற்றொருவருக்கு என்ன விரும்பமுள்ளது என்பதல்ல விவகாரம். கூட்டணியென்றால், அதன் முடிவுக்கு அதிலுள்ள அனைவரும் கட்டுப்பட வேண்டும். இந்த கூட்டணி என்ன முடிவெடுக்கிறதோ, அதற்கு சமத்துவ கட்சியின் அத்தனை உறுப்பினர்களும் கட்டுப்படுவார்கள். யாராவது ஒருவர் அதில் சறுக்கினாலும், அவரை உடனடியாக பிரதேசசபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவோம்“ என காரசாரமாக குறிப்பிட்டார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏனைய தலைவர்கள் யாரும் இப்படி வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக பேசாததால், நிலைமையை சமாளித்து வந்த ஜனநாயக போராளிகள் இன்று திண்டாடி விட்டனர்.
இதன்பின்னர், “தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இதுவரை எங்களை கண்டபடி பேசிவிட்டார்கள். அதனால் எமக்கு அவர்களுடன் கூட்டு வைக்க விரும்பமில்லை. அதுதவிர, சீ.வீ.கே எம்மோடு நல்ல மாதிரி பழகுவார். அதனால் தமிழரசு கட்சியுடன் கூட்டு வைக்க விரும்புகிறோம். பருத்தித்துறை பிரதேசசபையின் உபதவிசாளர் பதவியையும் எமக்கு தருவதாக சொல்லியுள்ளனர். எமது ஆட்களும் சைக்கிளுக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள் இல்லை“ என்றுள்ளனர்.
ஜனநாயக போராளிகள் கட்சியினர் பருத்தித்துறை பிரதேசசபையில் வெற்றியீட்டவில்லை, போனஸ் மூலமே நியமிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர், “உங்கள் உறுப்பினர்கள் அப்படி சொல்கிறார்கள் என நீங்கள் குறிப்பிட முடியாது. உங்களுக்கு போனஸை வழங்கியுள்ளோம். கூட்டணியின் முடிவுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டுமல்லவா? இல்லாவிட்டால் அந்த உறுப்பினர்களை பிரதேசசபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவோம்“ என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் குறிப்பிட்டனர்.
இதன் பின்னரே- “எங்களை வற்புறுத்தாதீர்கள். நாங்கள் உங்களுடனும் கூட்டணியாக இருக்கிறோம். அதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியுடனும் கூட்டணியாக இருக்கிறோம். எங்களை எங்கள் வழியிலேயே விட்டுவிடுங்கள்“ என எக்குத்தப்பு யோசனை தெரிவித்தனர்.
அத்துடன், “நீங்கள் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) பிற கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு நடத்துகிறீர்கள் தானே. உதாரணமாக நல்லூரில் மணிவண்ணன் தரப்புடன். அது மாதிரி நாமும் கூட்டணி பேச்சு நடத்துவது தப்பா?“ என்றும் கேட்டனர்.
பிறசபைகளில் ஆதரவை பெறுவதற்காக நல்லூரில் மணிவண்ணன் தரப்புடன் பேச்சு நடத்தியதும், ஜனநாயக போராளிகள் உபதவிசாளர் பதவி கிடைக்குமென்பதற்காக தமிழரசு கட்சியுடன் பேசுவதும் ஒன்றல்ல என்பதை வேந்தன், துளசிக்கு அங்கிருந்தவர்கள் புரிய வைக்க முயன்ற போதும், அவர்கள் தமது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.



