♦ கருணாகரன்
தமிழ்த்தேசியவாத அரசியல் மூன்று முகாம்களாகப் பிரிந்து கிடக்கிறது.
1. இலங்கைத் தமிழரசுக் கட்சி
2. சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி (DTNA)
3. கஜேந்திரகுமாரின் தலைமைக் கொண்ட தமிழ்த்தேசியப் பேரவை.
இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு சீ.வி.கே. சிவஞானம் பதில் தலைவராக இருந்தாலும் நடைமுறையில் கட்சியில் செல்வாக்குச் செலுத்துவதும் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் சுமந்திரனே. மாவை சேனாதிராஜா தலைவராக இருந்த காலத்திலேயே சுமந்திரன்தான் கட்சியை வழிநடத்தினார். ஏன், சம்மந்தன் தலைவராக இருந்தபோது கூட சுமந்திரனே கட்சியில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக அல்லது தீர்மானத்தை எடுக்க வைக்கும் வலுவான ஆளாக இருந்தார். சேனாதிராஜா தலைவராக இருந்தபோது, புதிய தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டாலும் சுமந்திரனை மீறி அவரால் எதையும் செய்ய முடியவில்லை. இதெல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியோடு ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்றவை இணைந்திருந்தபோதும் சுமந்திரனே முனைப்புக் கொண்டிருந்தார். இதனால்தான் சுமந்திரன் மீது தமிழரசுக் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் கசப்பும் இனிப்புமான விமர்சனங்கள் எழுந்தன. எனவே நடைமுறையில் சுமந்திரனே தமிழரசுக் கட்சியைத் தீர்மானிப்பவராக இருக்கிறார்.
என்பதால்தான், அரசாங்கத்துடன் இனப்பிரச்சியைப் பற்றிப் பேசுவதற்கான குழுவொன்றை உருவாக்க வேண்டும் என்ற பேரில் சிறிதரனைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் தந்திரோபாயத்தோடு கஜேந்திரகுமார் முயற்சித்தபோது அதைச் சுமந்திரனால் தடுத்த நிறுத்த முடிந்தது. சுமந்திரனை மீறிச் சிறிதரனால் செயற்பட முடியவில்லை. கஜேந்திரகுமாரோடு சிவஞானம் நெருக்கத்தை உண்டாக்க முயற்சித்தபோதும் சுமந்திரன் அதைக் கட்டுப்படுத்தி விட்டார். ஆகவே சுமந்திரனை மீறித் தமிழரசுக் கட்சியினால் தீர்மானங்களை எடுக்க முடியாது. தனித்து நகர்வுகளைச் செய்ய இயலாது.
ஆனால், தமிழரசுக் கட்சி குணாம்ச ரீதியாக இரு நிலைப்பட்டுள்ளது. ஒன்று, சம்மந்தன் பின்பற்றிய மென்னிலைத் தமிழ்த்தேசியவாதம். அது விடுதலைப்புலிகள் வலியுறுத்திய அல்லது அவர்களின் தொடர்ச்சியாக உள்ள தமிழ்த்தேசியவாதத்துக்கு வெளியேயானது. இன்னும் சொல்லப்போனால் புலிகளின் தவறுகளைப் பகிரங்கமாகவே விமர்சிக்கக் கூடியது. மட்டுமல்ல, முஸ்லிம், மலையக சமூகங்களோடு தொடர்பாடலையும் கொண்டது. அதையே சுமந்திரனும் தொடர விரும்புகிறார். சுமந்திரன் தொடர விரும்புகிறார் என்றால், தமிழரசுக் கட்சி, அதையே தொடர வேண்டும் என்பதுதான் அவருடைய நிலைப்பாடு. இதில் சுமந்திரனுக்கு ஆதரவாக சாணக்கியன், சத்தியலிங்கம் போன்றோர் உள்ளனர்.
ஆனால், அதை மறுதலித்து, தமிழரசுக் கட்சியைத் தீவிரத் தமிழ்த்தேசியவாதக் கட்சியாக மாற்றுவதற்கு சிறிதரன் போன்றோர் முயற்சிக்கின்றனர். இவர்கள் விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாகத் தம்மை பிரகடனப்படுத்தி – அடையாளப்படுத்திக் கொள்வோர். இதில் சீ.வி.கே சிவஞானமும் சாய்வு கொண்டுள்ளார். இருந்தாலும் இவர்களால் சுமந்திரனை மீறிக் கட்சியில் எந்தத் தீர்மானங்களையும் எடுக்க முடியாது. ஆனால், கட்சிக்கு வெளியேயான தேர்தல்களில் இவர்களே வெற்றியீட்டிய தரப்பினராக உள்ளனர்.
ஆக இவ்வாறு இருநிலைப்பட்டுப் பிளவுண்டிருக்கும் தமிழரசுக் கட்சி தனித்தே நிற்கிறது. ஆனாலும் அதுவே மக்களிடம் செல்வாக்கைப் பெற்றுள்ளது. என்றாலும் அது அரசியல் (கொள்கை) ரீதியாகப் பலவீனமான நிலையிலேயே உள்ளது.
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி (DTNA) இணைத் தலைமையைக் கொண்டது. ஆனாலும் இப்பொழுது தர்மலிங்கம் சித்தார்த்தன்தான் தலைமையேற்றுத் தொடர்பாடல்களைச் செய்கிறார். இந்தக் கூட்டணி, ஆயுதமேந்திப் போராடிய முன்னாள் விடுதலை இயக்கங்களின் வழிவந்தவர்களுடையது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், சமத்துவக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் போன்ற தரப்புகள் இதில் இணைந்துள்ளன. ஒப்பீட்டளவில் ஜனநாயக உள்ளடக்கத்தையும் ஜனநாயகப் பண்பையும் இந்தக் கூட்டணி கொண்டுள்ளது. இதனையுடைய செயலாளர் நா. இரட்ணலிங்கம் (குரு). இந்தக் கூட்டணி எத்தகையை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது கேள்வியே. அதை இந்தக் கூட்டணி தெளிவாகப் புலப்படுத்தவில்லை. அதாவது தமிழ்த்தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டாலும் அதை எந்த முறையில் – எத்தகைய வகையில் – முன்னெடுக்கிறது என்பதில் தெளிவில்லை. மென்னிலைத் தமிழ்த்தேசியவாதத்தை முன்னெடுப்பதாக இருந்தால், அது தமிழரசுக் கட்சியில் சுமந்திரன் தரப்புக்குக் கிட்டவாக வரும். தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதத்தை முன்னெடுப்பதாக இருந்தால், அது சிறிதரன், கஜேந்திரன்களுக்கு அணுக்கமாக வரும்.
ஆனால், தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதத்துக்கு வெளியேதான் சித்தார்த்தன், சந்திரகுமார் போன்றோர் போன்றோர் உள்ளனர். செல்வம் அடைக்கலநாதன் இரண்டுக்கும் இடையில் ஊசலாக் கொண்டிருக்கிறார். வாய்ப்புக் கிடைத்தால் அல்லது மறுபடியும் ஒரு அழைப்புக் கிடைத்தால் தமிழரசுக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்வதற்கு செல்வம் தயாராகவே இருக்கிறார்.
இதற்கெல்லாம் மாறாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதத்தின் பக்கமாக நகர்ந்துள்ளார். ஆனாலும் அவரால் கஜேந்திரன்களோடும் சிறிதரன் அணியோடும் இணைந்து நிற்க முடியாது.அவரோடு இணைந்து நின்ற முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனும் பிரிந்து சென்று விட்டார். தீவிரத் தேசியவாதப் போக்கைக் கொண்ட சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா இருவரும் கூட சுரேஸூடன் இணைவதற்குப் பதிலாக, கஜேந்திரன்களோடு சென்று விட்டனர். ஜனநாயப் போராளிகள் இடையூடாட்டப் போக்கில் உள்ளனர்.
ஆக ஒரு குழப்ப – கதம்ப – நிலைக்குள்தான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி (DTNA) உள்ளது. இது அதனுடைய பலவீனமாகும். அது பலம்பெறுவதாக இருந்தால், தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்கு அப்பாலான ஒரு பாதையை – அடையாளத்தை – அரசியலை முன்னெடுக்க வேண்டும். அந்தக் கூட்டணி, ஆயுதமேந்திய – செயற்பாட்டு அரசியற் பாரம்பரியத் கொண்டு பயணிப்பது. என்பதால் இன்னும் இருளும் இடரும் நீடிக்கத்தான் போகிறது. அடுத்து வரும் பத்துப் பதினைந்து ஆண்டுகள் தமிழ் மக்களுக்கு மிகுந்த சோதனை – வேதனைக் காலமாக இருக்கப்போகிறது.
மீட்பர் யார்?
00




