பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல நடிகை நுஷ்ரத் பரியா (31) கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்தாண்டு ஜூலை மாதத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்தது. இதில், பலர் கொல்லப்பட்டனர். பின்னர், ஹசீனா நாட்டை விட்டு தப்பியோடினார். அவர் மீது கொலை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இப்படியான, வழக்கொன்றில் ஹசீனாவின் கட்சிக்கு நிதி ஆதரவளித்ததன் மூலம், ஹசீனாவுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறி, கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக நுஷ்ரத் பரியா கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவர் வெளிநாட்டுக்கு செல்ல டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தபோது நுஸ்ரத் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரின் சட்டத்தரணி பிணை கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவரது மனு மே 22 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.
நடிகை நுஸ்ரத் பரியா தாய்லாந்துக்கு பயணிக்க திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால், விமான நிலையத்தில் அவர் போலீஸாரால் தடுத்துநிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வழக்கு விவரங்களின்படி, கடந்த ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி, எனாமுல் ஹக் என்பவர், வதாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜூலை இயக்கத்தில் (அப்போதைய பிரதமர் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம்) பங்கேற்றார்.
அன்று, அவரது காலில் சுடப்பட்டது. பின்னர் அவர் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பிறகு, இந்த ஆண்டு மே 3 ஆம் திகதி அவர் வழக்கைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் 17 கலைஞர்கள் உட்பட 283 நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
நுஸ்ரத் ஃபரியா 207வது குற்றவாளியாக பட்டியலிடப்பட்டுள்ளார். இந்த வழக்கு அவரை அவாமி லீக்கின் நிதி ஆதரவாளராக அடையாளம் காட்டுகிறது. அத்துடன், ஜூலை போராட்ட இயக்கத்துக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததையும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.
நுஸ்ரத் ஃபரியாவின் கைது பங்களாதேஷ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஹசீனா தப்பியோடிய பின், அவரது கட்சியை தடை செய்து, அவர் மீது ஏராளம் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவரது கட்சிக்கு நிதியளித்ததன் மூலம் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது, பரபலான விமர்சனத்தை தூண்டியுள்ளது.
பங்களாதேஷ் கலாச்சார விவகார ஆலோசகர் மொஸ்டோபா சர்வார் ஃபரூக்கி இது பற்றி கூறும்போது, “ஃபரியாவின் கைது சங்கடத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
எனினும், உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முகமது ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி, நடிகை நுஸ்ரத் மீது சட்ட வழக்கு நடந்து வருவதாகவும், தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். நுஸ்ரத் ஃபரியாவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டதாகவும், அவர் அதை மீற முயன்றபோது கைதானதாகவும் தெரிவித்தார்.
“அவர் விடுவிக்கப்பட்டிருந்தால், மக்கள் அவரை விடுவித்ததாகச் சொல்லியிருப்பார்கள். இப்போது அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். யாராவது அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என அவர் கேட்டார்.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் பற்றிய ‘முஜிப் தி மேக்கிங் ஆப் ஏ நேஷன்’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவாக நடித்ததற்காக நுஸ்ரத் பரியா நன்கு அறியப்பட்டவர். இந்த படம் பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தை வங்கதேசம் மற்றும் இந்தியா இணைந்து தயாரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.



