‘யோகிடா’ படத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஷாலுடன் தனக்கு திருமணம் ஆக இருப்பதை உறுதி செய்துள்ளார் நடிகை சாய் தன்ஷிகா.
நடிகர் சங்க கட்டிடம் முடிந்து, அதில்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார் விஷால். அவருக்கு சில காதல் தோல்விகளும் ஏற்பட்டன. இதனால் யாரை திருமணம் செய்யவுள்ளார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்தப் பின்னணியில், சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று நேற்று காலை முதல் தகவல் பரவியது.
‘கபாலி’, ‘பேராண்மை’, ‘பரதேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா. இது தொடர்பாக விசாரித்தபோது, சில வருடங்களாக விஷால் – சாய் தன்ஷிகா காதலித்து வருகிறார்கள் என்றும் நட்பாக பேசத் தொடங்கி, பின்பு காதலாக மாறிவிட்டது என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் சாய் தன்ஷிகா நடித்த ‘யோகிடா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். மேடையில் பேசிய சாய் தன்ஷிகா விஷாலுக்கும் தனக்கும் வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி திருமணம் நடைபெற இருப்பதை உறுதி செய்தார்.
இந்த நிகழ்வில் சாய் தன்ஷிகா பேசுகையில், “இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். 20 வருஷமா இந்த ஒரு நாளுக்காக காத்திருந்தோம்.
இன்னைக்கு காலையில் ஒரு செய்தியைப் பார்த்திருந்தோம். அதைப் பார்த்த பிறகும்கூட ’15 வருடமாக நம்ம நண்பர்கள். இனியும் நாம் நண்பர்களாகவே இருப்போம்’னு சொல்லியிருந்தோம். 15 ஆண்டுகளாக நண்பர்களாக, உறவினர்களாக இருந்தோம். ஆம், நாங்க ஆகஸ்ட் 29-ம் தேதி திருமணம் பண்ணிக்கவிருக்கிறோம்,” எனக் கூறினார்.
இவரைத் தொடர்ந்து விஷால் பேசுகையில், “பேரரசு சார், கொஞ்சம் நாள் கிசு கிசுக்கள் பரவவிட்டுட்டு அப்புறமாக திருமணம் பத்தி அறிவிக்கலாம்னு சொல்லியிருந்தார்.
‘கிசு கிசுலாம் போதும் சார்! நாங்க இருவரும் கண்டிப்பாக வடிவேலு – சரளா அம்மா மாதிரி இருக்கமாட்டோம்.
எங்களுக்குள்ள ஒரு நல்ல புரிதல் இருக்கு. இந்தப் படத்தோட ஆக்ஷன் காட்சிகளைப் பார்க்கும்போதுதான் கொஞ்சம் பயமாக இருக்கு. அவங்களோட அப்பாவும் இங்கதான் இருக்கார். அவர் ஆசிர்வாதத்துடன் இங்கே அறிவிக்கிறேன்.
I’m going to marry Sai Dhanshika! இதைத் தவிர எங்க ரெண்டு பேரைப் பத்தி பேசி இந்த நிகழ்வைக் கெடுக்க விரும்பல,” எனக் கூறினார்.




