இனவாத கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு தமிழர் தாயகத்தில் மக்கள் வாக்களிக்க கூடாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அண்மைக் காலமாக சிலர் இலங்கை தமிழரசுக் கட்சியை குறிவைத்து விமர்சித்து வருவதை நாம் அவதானித்து கொண்டுதான் வருகிறோம்.
எதிர்வரும் மே மாதம் 6ஆம்திகதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறுகின்றது.
இந்த தேர்தலில் தெற்கத்தேய சிங்கள ஏகாதிபத்திய கட்சிகள் வடக்கு கிழக்கில் போட்டி போடுகின்றன.
நான் ஏற்கனவே கூறியுள்ளேன் இவ்வாறான தெற்க்கத்தேய இனவாத சிங்கள கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்ககூடாது என்று.
இனவாத கட்சியான தேசிய மக்கள் சக்திக்கும் தமிழர் தாயகத்தில் மக்கள் வாக்களிக்க கூடாது என்றும் ஆரம்பம் முதலே கூறிவந்தவன் நான்.
அத்துடன் சிங்கள தேசிய கட்சிகளை முற்றுமுழுதாக நிராகரித்து தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் ஆரம்பம் முதல் நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.
அந்தவகையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் 58 உள்ளூராட்சி மன்றங்களில் டோட்டிபோடும் தமிழ் தேசிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
தமிழ் தேசிய நிலைப்பாட்டை பாராளுமன்ற தேர்தல்களில் 1956 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தக்க வைத்து வரும் ஒரேயொரு கட்சி என்றவகையிலும் தற்போது இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் கூட தமிழ்தேசியத்தை ஆதரிக்கும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் எட்டுப்பேரை கொண்ட பெருமைக்குரிய ஒரேயொரு கட்சி என்றவகையிலும் இந்த கோரிக்கையை நான் முன்வைத்திருக்கின்றேன்.
உள்ளுராட்சி சபைகளில் அனுபவம் மற்றும் அவ்துறைசார்ந்த அறிவுள்ளவர்கள் உறுப்பினர்களாக வரவேண்டும் அப்போது தான் அச் சபை வினைத்திறன் மிக்கதாக அமையும்.
அவ்வாறான தகமையுள்ளவர்கள் உள்ள ஒரேயொரு கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியே உள்ளது என்று கூறினால் அது மிகையானது அல்ல.
உள்ளூராட்சி தேர்தலில் அந்தந்த குடியிருப்பாளர்களுடன் அதே ஊரில் வாழ்ந்து அப்பகுதி மக்களின் தேவைகளை நேரடியாக உணர்ந்தவர்களே உண்மையான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அவ்வாறான உறுப்பினர்களே எமது இலங்கை தமிழரசு கட்சியில் வேட்பாளர்களாக உள்ளனர்.
மக்களின் நில உரிமை தொடர்பில் தொடர்ச்சியாக நாம் குரல் கொடுத்து வருகின்றோம்.
மயிலிட்டி பகுதியில் தனியார் காணியில் அமைக்கப்பட்ட விகாரை சட்டவிரோதமானது என நாம் வெளிப்படையாக கூறுகின்றோம்.
எனினும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சட்டவிரோத விகாரை என்று கூறுவார்களா?
சிங்கள இனவாத கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக விளங்கும் இவர்களால் தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோத விகாரை என கூறமுடியாது.
எனவே இம் முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தொடர்ந்தும் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள ஒரேயொரு கட்சியான இலங்கை தமிழரசு கட்சியை வடக்கு கிழக்கு மக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.




