ஜேவிபி வேறு, தேசிய மக்கள் சக்தி வேறு. அறிவுசார்ந்தவர்களின் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், ஜேவிபி, ஆசிரியர் சங்கம் ஆகியன ஒருங்கிணைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட அமைப்புத்தான் தேசிய மக்கள் சக்தி என திருவாய் மலர்ந்துள்ளார் யாழ் மாநகரசபையின் தேசிய மக்கள் சக்தி வேட்பாளரான, யாழ்ப்பாண பல்கலைக்கழக விரவுரையாளர் கபிலன்.
தேசிய மக்கள் சக்தியில் புத்திஜீவிகள் அமைப்பு உள்ளது. புலமைசார் அமைப்பு உள்ளது. பிரதமர் ஹரிணி ஜேவிபி அல்ல, அவர் புலமைசார் அமைப்பின் உறுப்பினர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜேவிபி மீது மக்கள் “படித்தவர்கள்“ என்ற போல மயக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த கருத்தை தெரிவித்தாரா அல்லது பொதுவாக யாழ்ப்பாண படித்தவர்களிடம் இருக்கும் அரசியல் சூனிய அறிவின் பிரதிபலிப்பாக இதனை தெரிவித்தாரா என்பது தெரியவில்லை.
இருந்தாலும் அவர் தெரிவித்த கருத்து மிக மிக தவறானது. அரசியல் அரிச்சுவடியை கூட அதுவரை அவர் அறிந்திருக்கவில்லை போல படுகிறது.
தேசிய மக்கள் சக்தியென்பது ஏராளம் சிறு தொழிற்சங்கங்கள், புலமைசார் அமைப்புக்களின் கூட்டணிதான். இது ஜேவிபிக்கு மட்டும் பொருத்தமானதல்ல. தென்னிலங்கை பிரதான கட்சிகள் அனைத்துமே இவ்விதம்தான் இயங்குகிறது. ஜேவிபி என்ற பெயரில் அரசியலில் முன்னகர முடியாத யதார்த்தத்தை உணர்ந்த போது, அவர்கள் போட்டுக்கொண்ட மாறுவேடமே அந்த பெயர்.
மற்றும்படி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி போன்ற பிரதான எல்லா கட்சிகளிடமும் இந்த கட்டமைப்புக்கள் உள்ளன.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகுவதற்கு புலமைசார் அமைப்பான வியத்மக தீவிரமாக இயங்கியது. கபிலன் யாழ் பல்கலைக்கழகத்தின் மிகச்சாதாரண விரிவுரையாளர் ஒருவர்தான். அவரிலும் உயர் பொறுப்பிலுள்ள துணைவேந்தர் சிறிசற்குணராஜா (அப்போது துணைவேந்தர் இல்லை) வியத்மகவின் யாழ்ப்பாண கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர்தான் துணைவேந்தரானார்.
ஆனால் கோட்டா பாதியிலேயே ஆட்சியை விட்டு ஓடினார். அதனால் மத்திய, மாகாண, உள்ளூராட்சி நிர்வாகங்களிற்கு வரும் “திடீர் படித்தவர்களில்“ மயக்கம் கொள்ள வேண்டாம். இவர்கள்தான் எதுவும் தெரியாத ஆபத்தானவர்கள்.
தேசிய மக்கள் சக்தியில் பல அமைப்புக்கள் இருந்தாலும், அதன் கொள்கை முடிவுகளையும், பிரதான முடிவுகளையும் ஜேவிபிதான் எடுக்கிறது. புலமையாளர்கள் என வெட்டி பந்தாவுக்காக கட்சிகளுடன் ஒட்டியிருப்பவர்களுக்கு முடிவெடுக்க எந்த அதிகாரமும், பங்கும் கிடையாது.
ஒருவேளை, ஜேவிபி யாழ் மாநகரசபையை கைப்பற்றி, கபிலன் முதல்வராகிறார் என வைத்துக்கொள்ளுங்கள்… நான் படித்தவன், எனக்கு முடிவெடுக்க தெரியும் என செயற்பட முடியுமா. இல்லை. சந்திரசேகரன் என்ன கட்டளையிடுகிறாரோ அதைத்தான் செய்ய முடியும். எந்த இடத்தில் கையொப்பமிட சொல்கிறாரோ அங்குதான் கையொப்பமிட முடியும்.
இதுதான் ஜேவிபியின் கட்டமைப்பு. அது இன்னமும் இயக்க பாணியிலேயே கட்டமைப்பாக செயற்படுகிறது.
ஜேவிபியின் தமிழ் எம்.பிக்கள் சிலர் தற்போது உள்ளுக்குள் புகைய ஆரம்பித்துள்ளனர். காரணம்- அவர்களால் பாராளுமன்றத்தில் நினைத்ததை போல பேச முடியாது. பேச்சை தயாரித்து கட்சி தலைமையகத்துக்கு அனுப்பி, அனுமதி பெற்ற பின்னரே பேசலாம். அவர்கள் எந்த புலமைசார் அமைப்புக்களிடமும் அனுமதி பெற அனுப்புவதில்லை. ஜேவிபி தலைமைக்கே அனுப்புகிறார்கள். யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளராக இருந்தவர் சிறிபவானந்தராஜா. அவர் தன்னையொரு புலமையாளராக கருதிக்கொள்ளலாம். ஆனால் அவர் உரையாற்றுவதென்றாலும், உரையை தயாரித்து கட்சி தலைமையகத்துக்கு அனுப்ப வேண்டும்.
சிறிபவனாந்தராஜாவின் உரையென்பதால், அவரை விட கற்றறிந்த ஒருவரே அவரது உரையை ஆராய வேண்டுமென, புலமையாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்படுமென நினைக்கிறீர்களா?
அப்படியெதுவும் இல்லை. அது ஜேவிபியினராலேயே படித்து, தீர்மானம் எடுக்கப்படும். அந்த தீர்மானம் எடுப்பவர்கள் அரசியல் அறிவற்றவர்கள் என சொல்லவரவில்லை. அவர்கள் ஜேவிபியின் கொள்கைக்கு மிகச்சரியானவர்கள். தமிழ் மக்களின் கொள்கைக்கு சரியானவர்களா என்பதுதான் கேள்வி. அதை யாழ்ப்பாணத்தில் புதிதாக உருவாகியுள்ள கபிலன் போன்ற புது வால்கள்தான் உணர வேண்டும்.
அந்த குழுவினர் மிகச்சாதாரணமாக படித்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால் அரசியல் அறிவுள்ளவர்கள். புலமைசார்ந்தவர்கள்தான் அரசியலுக்கு வேண்டும் என்ற மயக்கம் போலியானது, மக்களை ஏமாற்றும் உத்தி என்பதை புரிய வைக்க குறிப்பிட்டோம்.