முன்விரோதம் காரணமாக 9ம் வகுப்பு மாணவனை பாடசாலை கழிப்பறையில் தாக்கிய குற்றத்தில் அம் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 9ம் வகுப்பு மாணவன் கழிவறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கவின்ராஜ், பள்ளியில் இடைவேளையின் போது கழிவறைக்கு சென்றுள்ளார். அவ்வேளை திடீரென மயங்கி கீழே விழுந்ததனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் கவின்ராஜை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
குறித்த சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் கவின்ராஜ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனால் மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மாணவன் கவின்ராஜிற்கும், வேறொரு மாணவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளதையும், இந் நிலையில் நேற்று (27) காலை பள்ளியின் கழிவறையில் மீண்டும் கவின்ராஜிற்கும் அந்த மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
முன்விரோதம் வைத்திருந்த மற்றொரு மாணவனுடன் ஏற்பட்ட தகராறு முற்றிப் போகவே, குறித்த மாணவன் கவின்ராஜை சரமாரியாக தாக்கியதால், உயிரிழந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
.
குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவனுடன் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.