ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் 7வது ஆண்டு நினைவு தினம் இன்று (21) அனுசரிக்கப்படுகிறது. 2019 ஏப்ரல் 21 அன்று கொழும்பில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விடுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் நினைவுகூரும் வகையில், இன்று (21) நாடு முழுவதும் சிறப்பு நினைவுகூறல்களும் சமய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
பிரதான நினைவுகூறல் விழா, பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தலைமையில் கொழும்பில் உள்ள கொச்சிக்கடை தேவாலயத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் தூதர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று, நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் காலை 8.45 மணிக்கு இறந்தோர் நினைவு மணிகள் ஒலித்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து காலை 8.47 மணிக்கு, பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக மெழுகுவர்த்திகள் அல்லது எண்ணெய் விளக்குகள் ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து பிரார்த்தனை சேவைகள் நடைபெறும்.
கட்டுவபிட்டிய தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலிகளும் நினைவு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
செபப் பவனி மாலை 4.00 மணிக்கு நீர்கொழும்பில் உள்ள மாரி ஸ்டெல்லா மைதானத்தில் தொடங்கி, கட்டுவபிட்டியவில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலய வளாகத்தில் நிறைவடையும்.
கொழும்பு பேராயர், மல்கம் கர்தினால் ரஞ்சித், தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கவும், உண்மை வெளிப்படவும் பிரார்த்தனை செய்து, இன்றைய தினத்தை செப மற்றும் மௌன நினைவு நாளாக அனுசரிக்குமாறு கத்தோலிக்க சமூகத்தினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
2019, ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளில், இக்கொலைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான நபர்களைக் கண்டறிய அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் விசாரணையை நடத்தி வரும் வேளையில், சில தனிநபர்கள் தவறான கருத்துக்களைப் பரப்பி இந்த விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்த முயற்சிப்பதாகச் சுட்டிக்காட்டிய பேராயர், இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறியுமாறு கிறிஸ்தவ மக்கள் இறைவனிடம் மன்றாடிப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்.
2019-ஆம் ஆண்டில் நடந்த தொடர்ச்சியான கொடூரத் தாக்குதல்கள், கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கட்டுவப்பிட்டியவில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள சீயோன் தேவாலயம் உள்ளிட்ட பல இடங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தின. இதில் 269 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலின் பிரதான சந்தேகநபர்களாக குறிப்பிட்டு பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் அரச புலனாய்வுத்துறை பிரதான சுரஷ் சாலே ஆகியோர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




